​புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் 8 மணி நேரம் தொடர்ந்து நடனமாடி செஸ் விழிப்புணர்வு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள் 1,088 பேர் 8 மணி நேரம் தொடர் நடனமாடி செஸ் குறித்து விழிப்புணர்வு செய்திகளை பரப்பும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சி முடிந்ததும் ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனைக்கான சான்றிதழை கவிதாவிடம் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி முன்னிலையில் ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நடுவர் விவேக் நாயர் நேற்று வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியதாவது: தமிழக முதல்வரின் சீரிய முயற்சியால் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், மகாபலிபுரத்தில் வரும் 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடக்கிறது. இப்போட்டிகளை பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக சாதனை நிகழ்வாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து 8 மணி நேரம் 1,088 நபர்கள் மூலம் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது.

இந்த உலக சாதனை நிகழ்வை ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கி புதுக்கோட்டைக்கு பெருமை சேர்த்துள்ளது. மாணவ, மாணவியர்கள் அனைவரும் கலைகளில் சிறந்து விளங்குவதோடு விளையாட்டிலும் ஆர்வம் செலுத்த வேண்டும் என்றார்.

டிஆர்ஓ செல்வி, வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்லப்பாண்டியன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: