×

மனுதாரரின் வீட்டுமனையை விரைவில் அளவீடு செய்யாவிட்டால் தாசில்தார், ஆர்.ஐ. ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்; நுகர்வோர் ஆணையம் உத்தரவு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நல்லூர் நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருக்கு புஞ்சை புளியம்பட்டியில் 227 சதுர மீட்டர் மனையிடம் உள்ளது. இந்த இடத்துக்கு வரைபடம் தயார் செய்ய வேண்டி, மனை இடத்தை அளந்து அத்துமால் காண்பிக்க சத்தியமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் மனு செய்தார். இதற்கான கட்டணமாக கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 19ம் தேதி ரூ.400ஐ வங்கி மூலம் செலுத்தினார். ஆனால், அவரது மனு மீது தாசில்தார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதி ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு அளித்தார். இதன்பேரில், அவர், ஈரோடு மாவட்ட நில அளவை அதிகாரி உரிய நடவடிக்கை எடுக்க நவம்பர் 30ம் தேதி உத்தரவிட்டார். ஆனால், அதற்கு பிறகும் எந்த நடவடிக்கையும் இல்லை.

இதையடுத்து மனையின் உரிமையாளர் பழனிச்சாமி கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 5ம் தேதி ஈரோடு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஈரோடு மாவட்ட கலெக்டர், சத்தியமங்கலம் தாசில்தார், சத்தியமங்கலம் வட்ட துணை ஆய்வாளர் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்தார். வழக்கினை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் பூரணி, உறுப்பினர்கள் வேலுசாமி, வரதராஜ பெருமாள் ஆகியோர் விசாரணை நடத்தி, தீர்ப்பளித்தனர். அதில், கூறியிருப்பதாவது: சம்பந்தப்பட்ட மனை இடத்தை சத்தியமங்கலம் தாசில்தார், வட்ட துணை ஆய்வாளர் ஆகிய 2 பேரும் சேர்ந்து வரும் செப்டம்பர்  22ம் தேதிக்குள் அளவீடு செய்து அத்துமால் செய்து புல வரைபடம் தயார் செய்து பழனிச்சாமியிடம் ஒப்படைத்து, வருவாய் பதிவேட்டில் முறையாக பதிவு செய்ய வேண்டும்.

இந்த பணியை ஈரோடு கலெக்டர் கண்காணித்து தாசில்தார், வட்ட துணை ஆய்வாளருக்கு தக்க அறிவுரை மற்றும் உத்தரவு வழங்க வேண்டும். 2 மாத காலத்தில் அளவீடு செய்து அத்துமால் செய்யப்பட்ட வரைபடம் வழங்க தவறும் பட்சத்தில் சத்தியமங்கலம் தாசில்தார் மற்றும் வட்ட துணை ஆய்வாளர் தலா ரூ.25 ஆயிரம் இழப்பீட்டு தொகையாகவும், தலா ரூ.5 ஆயிரம் வழக்கு செலவு தொகையாகவும் பழனிச்சாமிக்கு அடுத்த 2 மாதத்துக்குள் வழங்க வேண்டும். தவறினால் இந்த உத்தரவு வெளியிடப்பட்ட தேதியில் இருந்து 9 சதவீதம் வட்டி தொகையுடன், 2 பேரின் ஊதியத்தில் தொகையை பிடித்தம் செய்து புகார்தாரருக்கு வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்ப்பில் கூறியிருந்தனர்.

Tags : Dasildar ,Consumer Commission , Tahsildar, R.I. if the petitioner's house is not measured soon. Compensation of Rs.50 thousand should be paid; Consumer Commission Directive
× RELATED தேர்தல் பறக்கும் படை சோதனை:...