திருப்பூர் ஜவுளிக்கடை அதிபர் கடத்தல்: வடமாநில இளைஞர்கள் கைது

திருப்பூர்: வடமாநில வியாபாரிகளிடம் கடனுக்கு ஜவுளிகளை பெற்று பணத்தை கொடுக்காமல் கடையை மூடிவிட்டு வேறு இடத்தில் கடை திறக்க முயன்ற தொழிலதிபர் கடத்தப்பட்டார். திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் காமராஜர் நகரில் வசிப்பவர் தொழிலதிபர் சரவணன். இவர் ஈரோட்டில் ஜவுளி கடை நடத்தி வருகிறார். இதற்காக ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ஜவுளி ரகங்களை கடனாக பெற்று விற்பனை செய்து வந்துள்ளார். அவ்வாறு கடனாக பெற்ற ரூ.59 லட்சம் மதிப்பிலான துணிகளுக்கு பணத்தை திருப்பி தராமல் பல மாதங்களாக ஏமாற்றியுள்ளார்.

ஈரோட்டில் உள்ள ஜவுளி கடையை மூடிவிட்டு தலைமறைவாகி விருதுநகர் மாவட்டத்தில் மற்றோரு ஜவுளி கடையை வைப்பதற்காக முயற்சிகள் மேற்கொண்டு வந்துள்ளார். இதையறிந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜவுளி வியாபாரிகள் ஆன  கைலாஸ்குமார், லக்ஷ்மன் சிங், அசோக் குமார், பல்பத்சிங் ஆகியோர் சரவணனிடம் நைசாக பேசி கடனாக துணிகளை வழங்குவதாக ஆசை வார்த்தைகளை கூறியுள்ளனர். இதை நம்பிய சரவணன் தான் தங்கியிருந்த இடத்தை அவர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து விருதுநகர் சென்ற வடமாநில இளைஞர்கள் அவர் தங்கியிருந்த விடுதியில் இருந்து அவரை கடத்தியுள்ளனர். பின்பு வடமாநில இளைஞர்களின் நண்பரான சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த அம்பேத்கர் என்பவர் உதவியுடன் ஓமலூரில் உள்ள தனியார் விடுதியில் அடைத்து வைத்துள்ளனர். அப்போது தொழிலதிபர் சரவணன் தான் கடத்தப்பட்டுள்ளதாகவும், தன்னை கடத்தி வந்த வடமாநில இளைஞர்கள் கொலை செய்யும் நோக்கத்தில் உள்ளதாகவும் மேளாலரிடம் ரகசியமாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து விடுதி மேளாலர் ஓமலூர் போலீசாருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் ஓமலூர் போலீசார் விடுதிக்கு விரைந்து சென்று கடத்தப்பட்ட சரவணனை மீட்டனர். அவரை கடத்தி சென்ற வடமாநில இளைஞர்களை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் தங்களுக்கு தர வேண்டிய கடன் தொகைக்காக தொழிலதிபர் சரவணனை கடத்தியதாக இளைஞர்கள் ஒத்துகொண்டதன் பேரில் கைலாஸ்குமார், லக்ஷ்மன் சிங், அசோக் குமார், பல்பத்சிங் ஆகிய 4 பேர் மீதும் ஆள் கடத்தல் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கடத்திய தொழிலதிபரை பதுக்கி வைக்க உதவிய ஓமலூரைச் சேர்ந்த அம்பேத்கர் தலைமறைவான நிலையில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: