முல்லைப் பெரியாறு அணை குத்தகை தொகையை புதுப்பிக்க கேரள அரசு திட்டம்?

திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணை குத்தகைத் தொகையை புதுப்பிப்பது குறித்து 52 வருடங்களுக்கு பிறகு கேரள அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முல்லைப் பெரியாறு அணை கேரளாவில் இருந்தாலும், இந்த அணை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது தொடர்பாக 1886ம் ஆண்டு அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் 999 வருடங்களுக்கு குத்தகை ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. குத்தகைத் தொகையாக கேரளாவுக்கு அப்போது 1 ஏக்கருக்கு வருடத்திற்கு ₹5 தமிழ்நாடு கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது.

பின்னர் 1970ம் ஆண்டு இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது. அப்போது இந்த தொகை ₹5 லிருந்து 30ஆக உயர்த்தப்பட்டது. மேலும் மின்சார தயாரிப்பிலும் கேரளாவுடன் ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதற்கும் கேரள அரசுக்கு தமிழ்நாடு பணம் செலுத்தி வருகிறது. 30 வருடங்களுக்குப் பிறகு இந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும் என்று அப்போது தெரிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 2000 ஆண்டில் இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட வேண்டும். ஆனால் உச்சநீதிமன்ற வழக்கு விவகாரங்கள் தொடர்பாக கடந்த 22 வருடங்களாக இந்த குத்தகை தொகைக்கான ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை.

இந்த நிலையில் குத்தகைத் தொகையை புதுப்பிப்பது குறித்து கேரள அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக கேரள நீர்ப்பாசனத்துறை உயர் அதிகாரிகள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் வருவாய் மற்றும் வனத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டதாக தெரிகிறது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

Related Stories: