×

பூதப்பாண்டி அருகே ஜெபம் செய்வது போல் நடித்து 10ம் வகுப்பு மாணவியை ஆந்திராவுக்கு கடத்தி சென்ற போலி போதகர் கைது -மனைவி மூலம் பொறி வைத்து பிடித்த போலீஸ்

நாகர்கோவில் : பூதப்பாண்டி அருகே தங்கையின் உடல் நிலையை ஜெபம் செய்து குணமாக்குவதாக கூறி, அக்காவை கடத்தி சென்ற போலி போதகரை 3 மாதங்களுக்கு பின் போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி அருகே உள்ள பொற்றையடி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (34). இவர் மீது சுசீந்திரம், தென்தாமரைக்குளம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக போதகர் என கூறி வீடுகளுக்கு ஜெபம் செய்ய, செந்தில்குமார் செல்வது வழக்கம். இந்த நிலையில் பூதப்பாண்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவரின் அறிமுகம் செந்தில்குமாருக்கு கிடைத்தது. அந்த தொழிலாளிக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் 3வது மகள் உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்தார்.
 
ஒருநாள் தொழிலாளியின் வீட்டுக்கு சென்ற செந்தில்குமார், உடல் நிலை சரியில்லாமல் இருந்த தொழிலாளியின் மகளை பார்த்தார். சிறிது நேரம் அவரது தலையில் கை வைத்து ஜெபம் செய்த செந்தில்குமார், உங்கள் மகள் உடலில் சாத்தான் குடி கொண்டுள்ளான். ஜெபம் செய்து, நான் நிவர்த்தி செய்து தருகிறேன் என்றார். இதற்கு தொழிலாளியும் சம்மதம் தெரிவித்தார். அதன் பேரில் அடிக்கடி செந்தில்குமார் தொழிலாளியின் வீட்டுக்கு செல்ல தொடங்கினார்.

இந்த நிலையில் கடந்த 22.4.2022 அன்று செந்தில்குமார், தொழிலாளியின் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டில் தொழிலாளி இல்லை. 2 மற்றும் 3 வது மகள் மட்டும் இருந்தனர். இதில் 2 வது மகளுக்கு 16 வயது தான் ஆகிறது. 10ம் வகுப்பு படித்து வந்தார். ஏற்கனவே செந்தில்குமார் அறிமுகம் ஆனவர் என்பதால் அவருடன், மாணவி சகஜமாக பேசுவது வழக்கம். அந்த வகையில் வீட்டுக்கு வந்த செந்தில்குமார், மாணவியிடம் நைசாக பேசி அவரை கடத்தி சென்றார். மகளை காணாமல் அக்கம் பக்கத்தில் தொழிலாளி தேடினார்.

அப்போது தான் செந்தில்குமார் கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து தொழிலாளி இது குறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர். போலீசார் கடத்தல் வழக்கு பதிவு செய்து  தேடி வந்தனர். இந்த நிலையில் செந்தில்குமார் மாணவியுடன் ஆந்திர பிரதேசம் மாநிலம் விஜயவாடா  பகுதியில் ஒரு கிராமத்தில் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து செந்தில்குமாரை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை தனிப்படை போலீசார் செய்து வந்தனர்.  இது தொடர்பாக செந்தில்குமாரின் மனைவியின் உதவியை போலீசார் நாடினர். அதன் மூலம் செந்தில்குமார், விஜயவாடாவில் இருந்து விமானத்தில் திருவனந்தபுரம் வருவது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் நேற்று முன் தினம் மதியம் திருவனந்தபுரம் சென்று விமானத்தில் வந்திறங்கிய செந்தில்குமாரை  கைது செய்தனர். மாணவியையும் மீட்டனர். மாணவிக்கு 16 வயதே ஆவதால் போக்சோ வழக்கும் செந்தில்குமார் மீது பதிவு செய்யப்படும் என தெரிகிறது. செந்தில்குமாரை கைது செய்து, நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Boothpandi ,Andhra Pradesh , Nagercoil: 3 fake pastors who abducted their sister, claiming to heal her sister's condition by praying near Bhuthapandi
× RELATED ஆந்திர மாநிலம் விஜயவாடாவில்...