காவேரிப்பாக்கத்தில் ஆபத்தான நிலையில் தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள்-மேம்பால பணிகள் விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காவேரிப்பாக்கம் : ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது காவேரிப்பாக்கம் பேரூராட்சி மற்றும் சுமைதாங்கி, கடப்பேரி, ஓச்சேரி, பெரும்புலிப்பாக்கம், உள்ளிட்ட பகுதிகள். இப்பகுதிகளில் பஸ்சுக்காக தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள், கனரக வாகனங்களில் சிக்கி விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.

தற்போது வாலாஜா டோல்கேட் பகுதியில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டம் வெள்ளகேட் பகுதிவரை தேசிய நெடுஞ்சாலையில் ஆறு வழிச் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு பக்கமும், நிலங்கள் மற்றும் வீடு, கடைகள், உள்ளிட்டவைகளை கையகப்படுத்தி தார்சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பூண்டி கூட்டுரோடு, சுமைதாங்கி, ஈராளச்சேரி, ஓச்சேரி, பெரும்புலிப்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாலம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு  வருகின்றன. ஆனால் காவேரிப்பாக்கம் பகுதியில் மட்டும் இன்னும் தொடங்கப் படாமல் இருந்து வருகின்றன. மேலும் பேருந்து நிலையம் ஜன்சன், அத்திப்பட்டு ஜன்சன், ஆகிய பகுதிகளில், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது கனரக வாகனங்களில் சிக்கி விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.

இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு, செல்லும் மாணவர்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கடந்து செல்கின்றனர்.எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலனைக் கருத்தில் கொண்டு, விபத்துக்களை தடுக்க மேம்பாலம் பணிகள் விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: