திருப்பதி பொம்மகுண்டா பகுதியில் சலவைத் துறையை மேம்படுத்த வேண்டும்-மாநகராட்சி ஆணையாளர் உத்தரவு

திருப்பதி :  திருப்பதியில் சலவை தொழிலாளர்களின் சலவைத்துறையை மேம்படுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

திருப்பதியின் பொம்மகுண்டா, பாறசாலை பகுதிகளில் கார்ப்பரேட்டர்கள் ரேவதி, கீதா ஆகியோருடன் மாநகராட்சி கமிஷனர் அனுபமா அஞ்சலி நேற்று ஆய்வு செய்தார். அப்போது, ஆணையர் பேசுகையில், துப்புரவு தூய்மைக்கு முன்னுரிமை அளித்து, செயலகங்களின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளின் தொடர் கண்காணிப்பு இருக்க வேண்டும்.

சலவைத் தொழிலாளர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சலவைத்துறை பகுதியில் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொண்டு ஷெட் அமைத்து, சேதமடைந்த ஆழ்துளை கிணற்றை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பின்னர், இப்பகுதியில் செயலகம் கட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள பொறியியல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதேபோல் சீனிவாச சேது மேம்பால பணிகள் நடைபெற்று வரும் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். பிரகாசம் பூங்காவில்  கட்டப்பட்டு வரும் புல்வெளி அமைப்புகளை பார்வையிட்டு உரிய அறிவுரைகளை வழங்கினார்.

Related Stories: