உடுமலை திருமூர்த்திமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள் கூட்டம்; களைகட்டும் வியாபாரம்

உடுமலை : உடுமலை திருமூர்த்திமலையில் அருவியில் ஆனந்த குளியல் போட குவிந்த சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் வியாபாரம் களை கட்டியது. இதனால் வியாபாரிகள், மலைவாழ் மக்கள் மகிழ்ந்தனர். விடுமுறையையொட்டி திருமூர்த்தி மலை மீது அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலை காண நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் அருவியில் குளிக்கும் மகிழ்ச்சி திருமூர்த்தி மலை மீதுள்ள பஞ்சலிங்க அருவியில் மட்டுமே கிட்டுவதால்,  வெயிலை சமாளிக்கவும் ஆனந்த குளியல் போடவும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

குறிப்பாக சனி, ஞாயிறு வார விடுமுறை தினங்களில் நூற்றுக்கணக்கான கார்கள், பஸ்களில் ஆயிரக்கணக்கானோர் சுற்றுலா வருகின்றனர். வருடம் முழுவதும் பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மாலை 5 மணி வரை அனுமதி பெற்று குளித்து மகிழ்கின்றனர். இதனால்  நாள்தோறும் கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது. அதோடு அமணலிங்கேஸ்வரர் கோயில் அருகே மலைவாழ் மக்கள் அமைத்துள்ள கடைகளிலும் வியாபாரம் களை கட்டுகிறது.குறிப்பாக மாங்காய்,நெல்லிக்காய், கலாக்காய், இலந்தவடை போன்ற இனிப்பும், புளிப்பும் கலந்த பழங்களை சுவைக்க பெண்கள் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்.

அன்னாசி பழம், தர்பூசணி பழம், பலா பழம், வாழை பழம் போன்ற பழங்களுடன், மிளகாய் பஜ்ஜி, வாழைக்காய் பஜ்ஜி போன்றவை சுட, சுட விற்பனை செய்யப்படுகிறது.மருத்துவ குணம் மிக்கதும் சீசன் வியாபாரமுமாகிய இலந்தவடை,நெல்லிக்காய் போன்றவற்றை பள்ளி, கல்லூரி மாணவிகள் சுவைத்து மகிழ்கின்றனர்.

கொரோனா காலத்தில் வெறிச்சோடி கிடந்த சுற்றுலா தலங்கள் அனைத்தும் தற்போது களை கட்டி வருவதால் அவர்களை நம்பி சிறு, சிறு கடைகள் நடத்தி வரும் வியாபாரிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். மேலும் அமராவதி அணை அருகே 2 ஆண்டுக்கு பின்னர் தற்போது அணைக்கட்டில் பிடிக்கப்படும் மீன்கள் சுவைபட பொறித்து தரப்படுகிறது. ஆர்டர் கொடுக்கின்ற சுற்றுலா பயணிகளுக்கு மீன் குழம்புடன் சாப்பாடும் தரப்படுகிறது. வார விடுமுறை தினங்களில் வியாபாரம் களை கட்டுவதால் மீனவர்களும், உணவக உரிமையாளர்களும் மீண்டும் சுறுசுறுப்படைந்தனர்.

Related Stories: