நேஷனல் ஹெரால்டு வழக்கு..சோனியா காந்தி 2-வது முறையாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம்

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 2-வது முறையாக  அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்டது. நாடு விடுதலைக்கு முன்னரே அசோசியேட் ஜர்னல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை நேரு தொடங்கி, சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்புடன் இந்த பத்திரிகையை நடத்தி வந்தார்.

அந்த நிறுவனத்தில் நிதி பற்றாக்குறை ஏற்பட்டதால் காங்கிரஸ் கட்சி ரூ.90.25 கோடியே கடனாக கொடுத்துள்ளது. அந்த கடனை நிறுவனம் திருப்பிச் செலுத்த முடியாததால், அதன் பங்குகளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை இயக்குனர்களாக கொண்ட யங் இந்தியா நிறுவனம் வாங்கியது.

இதன் மூலம் வெறும் ரூ.50 லட்சம் மூலதனத்தில் தொடங்கப்பட்ட யங் இந்தியா நிறுவனம், ரூ.90.25 கோடி கடனுக்காக அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2000 கோடி மதிப்புள்ள சொத்துகள், பங்குகளை பெற்றுக்கொண்டதாகவும் இதில் முறைகேடு இருப்பதாகவும் பாஜக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.   

அதனையடுத்து, சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் சோனியா காந்தி, ராகுல்காந்தி மீது வழக்குப்பதிவு செய்த, அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக ராகுல் காந்தி முன்னதாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.

இந்தநிலையில், சோனியா காந்தி கடந்த 21-ம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதனையடுத்து மீண்டும் சோனியா காந்தி-யை இன்று ஆஜராகும்படி அமலாக்கத்துறை நோட்டீஸ் வழங்கி இருந்தது. அதனை ஏற்று, டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் 2-வது முறையாக சோனியா காந்தி ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார். சோனியா காந்தியுடன் அவரது மகள் பிரியங்கா காந்தியும் அமலாக்கத்துறை அலுவலகம் சென்றுள்ளார்.

Related Stories: