×

ஊழலை ஒருபோதும் ஆதரிக்கமாட்டேன்... எனது கட்சியை பாஜகவினால் எப்போதும் உடைக்க முடியாது : மேற்கு வங்க முதல்வர் மம்தா பேச்சு!!

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் அரசு ஆசிரிய நியமன முறைகேடு வழக்கில் சிக்கியுள்ள அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அவருக்கு நெருக்கமானவரும் மற்றும் நடிகையுமான அர்பிதா முகர்ஜி ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க ஆகஸ்ட் 3ம் தேதி வரை அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சாரதா சிட் ஃபண்ட் ஊழல் வழக்கு போல ஆளும் திருநாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ள ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கு தற்போதைய தொழில் துறை அமைச்சரும் முந்தைய கல்வி அமைச்சருமான பார்த்தா சாட்டர்ஜி மற்றும் நடிகை அர்பிதா முகர்ஜி ஆகியோர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

அமைச்சர் பார்த்தாவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை தொடர்ந்து அமலாக்கத்துறையின் கோரிக்கைக்கு இணங்க அவருக்கு ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிசிச்சை அளிக்கப்பட்டது. இன்று காலை 7 மணிக்கு கொல்கத்தா கொண்டு செல்லப்படும் அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்க உள்ளன. அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் நடிகை அர்பிதாவை விசாரிக்க தலா 10 நாட்களுக்கு அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2014 முதல் 2021 வரை கல்வி துறை அமைச்சராக இருந்த பார்த்தா சாட்டர்ஜி ஆசிரியர் நியமன தொடர்பாக பலகோடி ரூபாய் லஞ்சம் வாங்கியுள்ளார் என்பது வழக்காகும்.

கடந்த வாரம் இவர் வீட்டு அறையில் 21 கோடி ரூபாய் ரொக்கம் கொட்டி கிடந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குற்றம் இழைத்தவர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுத்தாலும் கவலை இல்லை என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. தனது கட்சியை பா.ஜ.கவால் எப்போதும் உடைக்க முடியாது என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அம்மாநில அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கைது செய்யப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி ஊழலை ஒருபோதும் தான் ஆதரிக்கமாட்டேன் என்று தெரிவித்தார். தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்ட வேண்டும் என்று தெரிவித்த அவர், இருப்பினும் தன்னை குறித்து பரப்பப்படும் பொய் பிரசாரத்தை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார்.


Tags : BJP ,West Bengal ,CM ,Mamata , Corruption, will not support, Mamata, false, propaganda, condemnation
× RELATED மம்தா குறித்த சர்ச்சை பேச்சு பாஜ தலைவர் திலிப் கோஷ் மீது வழக்குப் பதிவு