×

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் டெலிகிராம் ஒத்துழைக்கவில்லை: புலனாய்வு குழு புகார்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் +2 வகுப்பு படித்து வந்த மாணவி, கடந்த 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனையடுத்து, கடந்த 17-ம் தேதி சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி முன்பு மாணவியின் மரணத்திற்கு நீதிகேட்டு நடைபெற்ற போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. பள்ளிப்பேருந்துகள், இருசக்கர வாகனங்கள், பொருட்கள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டதோடு, தீவைத்தும் கொளுத்தப்பட்டது. இந்த கலவரம் திட்டமிட்ட கலவரமாக இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து.

இந்த கலவரம் எதனால் ஏற்பட்டது? இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் மாணவி மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த கலவரம் யாரால் ஏற்படுத்தப்பட்டது என்று கேள்வி எழுப்பப்பட்டது. மாணவி மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரும், கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினரும், சமூக வலைதளங்கள் மூலம் போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள் பற்றி சைபர் கிரைம் போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பான விசாரணையில் டெலிகிராம் நிறுவனம் போதுமான ஒத்துழைப்பு தரவில்லை என்று சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது. கலவரத்தை தூண்டும் வகையில் பதிவிட்டவர்களின் விவரங்களை டெலிகிராம் நிர்வாகம் தர மறுத்ததாகவும் தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப், முகநூல் நிறுவனம் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது என்று சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது. வாட்ஸ்ஆப் குழுக்களை காட்டிலும் டெலிகிராம் குழுவில் தான் அதிகப்படியான நபர்கள் இணைந்துள்ளதாகவும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.




Tags : Telegram ,Intelligence Committee , Telegram not cooperating in Kallakurichi girl case: Investigation panel complains
× RELATED புதுவையில் 3 பேரிடம் ₹1.61 லட்சம் மோசடி