கார்கில் யுத்த வெற்றி நாள்: ராணுவ வீரர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வீரவணக்கம்; முப்படை தளபதிகள் மரியாதை!!

டெல்லி : கார்கில் போரில் உயர்நீத்த தியாகிகள் மற்றும் வீரர்களுக்கு முப்படை தளபதிகள் மரியாதை செலுத்தினர்.  கார்கில் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் இருந்த இந்திய பகுதியில் உள்ள மலை உச்சியை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து இருந்த பாகிஸ்தான் படைகளை எதிர்த்து போரிட்டு, 1999 ஜூலை 26ல் இந்திய ராணுவம் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை நினைவுகூறும் வகையிலும் நாட்டிற்காக  உயிர் தியாகம் செய்தவர்களை நினைவுகூறும் வகையிலும் கார்கில் விஜயதிவாஸ் தினம் ஆண்டுதோறும் ஜூலை 26ல் அனுசரிக்கப்படுகிறது.

இந்த நிலையில் கார்கில் போர் நினைவிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தானுடன் நடைபெற்ற போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு முப்படை வீரர்கள் மரியாதை செலுத்தினர். விமானப்படை விமானங்கள் வானில் பறந்து பூமழை பொழிந்தன. தொடர்ந்து டெல்லியில் உள்ள நினைவிடத்தில் முப்படை தளபதிகள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். போர் நினைவுச் சின்னத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார்.

கார்கில் யுத்த வெற்றி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் ட்விட்டர் பக்கங்களில் அஞ்சலி செலுத்தினர். கார்கில் யுத்த வெற்றி நாளை முன்னிட்டு லடாக்கின் திராஸ், ஜம்மு உள்ளிட்ட பகுதிகளில் போர் நினைவுச் சின்னங்களில் ராணுவ தளபதிகள் ராணுவ மரியாதையுடன் வீரவணக்கம் செலுத்தினர். சென்னை ராஜாஜி சாலையில் உள்ள கார்கில் போர் நினைவுச் சின்னத்தில் ராணுவ அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.

Related Stories: