×

ஒரே வாரத்தில் 9 உயர்நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 56 புதிய நீதிபதிகளை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை

டெல்லி : ஒரே வாரத்தில் 9 உயர்நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 56 புதிய நீதிபதிகளை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான நீதிபதிகளை தேர்வு செய்து கொலீஜியம் பரிந்துரை செய்வது இது 2வது முறையாகும். கடந்த ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி 12 உயர்நீதிமன்றங்களுக்கு 65 நீதிபதிகளை தேர்வு செய்து கொலீஜியம் பரிந்துரை செய்து இருந்தது. உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் பணியிடங்கள் பெரிய அளவில் காலியாக இருப்பதால் வழக்குகள் தேக்கம் அடைவதை கவனத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பரிந்துரைக்கப்பட்டவர்களில் வழக்கறிஞர்கள் மற்றும் நீதித்துறை அலுவலர்கள் ஆவார்கள். 15 காலிப் பணியிடங்களை கொண்ட தெலுங்கானா உயர்நீதிமன்றத்திற்கு 6 வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமனம் செய்து இருக்கிறது கொலீஜியம். இதே போன்று 13 வழக்கறிஞர்களை பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதிகளாக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இங்கு 38 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், இந்த பரிந்துரையை கொலீஜியம் வழங்கி உள்ளது. 26 காலிப் பணியிடங்கள் உள்ள கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு நீதித்துறை அலுவலர்கள் 9 பேர் நீதிபதிகளாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 1ம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் 25 உயர்நீதிமன்றங்களில் 381 நீதிபதி பணியிடங்கள் காலியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.


Tags : High Courts, Posts, Judges
× RELATED மணிப்பூரில் வாக்குச்சாவடியை சூறையாடிய வன்முறைக் கும்பல்!