புதுடெல்லி: செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்க வருமாறு சோனியா காந்திக்கு திமுக குழுவினர் நேரில் அழைப்பிதழ் தந்து வரவேற்றனர். 4வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னை மாமல்லபுரத்தில் வரும் 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 200 நாடுகளைச் சேர்ந்த 2,500 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளனர். இப்போட்டிக்காக, தமிழக அரசு தரப்பில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வரும் 28ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்க விழா கோலாகலமாக துவங்க உள்ள நிலையில், இதில் கலந்து கொள்ள ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் எம்பி ராகுல் காந்தியை நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் சந்தித்த டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக குழு செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையின் படி வழங்கினார்கள். அப்போது திமுக எம்பிக்கள் கனிமொழி, சண்முகம், தமிழச்சி தங்கபாண்டியன், வில்சன் ஆகியோர் உடன் இருந்தனர்.