தமிழ்நாட்டை சேர்ந்த மாணிக்கம் தாகூர், ஜோதி மணி உட்பட காங். எம்பி.க்கள் சஸ்பெண்ட்: மக்களவையில் பதாகையுடன் அமளி செய்ததால் சபாநாயகர் அதிரடி நடவடிக்கை

புதுடெல்லி: மக்களவையில் விதிமுறை மீறி அமளி செய்ததாக, காங்கிரஸ் எம்பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உட்பட 4 பேரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் ஓம் பிர்லா அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இந்த கூட்டத்தொடர் முழுவதும் 4 எம்பி.க்களும் பங்கேற்க கூடாது என சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டுத்தொடர் கடந்த 18ம் தேதி துவங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதலே இரு அவைகளும் எதிர்க்கட்சிகளால் முடக்கப்பட்டு வருகிறது.   அக்னிபாதை திட்டம், விலைவாசி உயர்வு, அரிசி, பால், தயிர் உள்ளிட்ட  பொருள்களுக்கு ஜிஎஸ்டி விதித்தது உள்பட பல நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் எழுப்புகின்றனர். இதனால் இரு அவைகளிலும் முக்கிய அலுவல்கள் ஏதும் நடைபெறவில்லை.

இந்நிலையில் நேற்று பிற்பகலில் மக்களவை தொடங்கியது முதலே  காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்கள்  கடும் அமளியில் ஈடுபட்டனர்.  அவை செயல்படவிடாமல் சபாநாயகரின் இருக்கை முன்பு நின்று  மாணிக்கம் தாகூர்,ஜோதி மணி, டி.என்.பிரதாபன், ரம்யா ஹரிதாஸ் ஆகியோர் பதாகைகளை கையில் வைத்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா, ‘‘அவைக்குள் பதாகைகள் கொண்டு வருவதை நிறுத்துமாறு உறுப்பினர்களை கேட்டுக் கொள்கிறேன். விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளது. அவைக்குள் பதாகை கொண்டுவரும் எந்த ஒரு உறுப்பினரும் அவை நடவடிக்கையில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவையின் கண்ணியத்தை காப்பாற்றுவது உறுப்பினர்களின் கடமை’’ என்றார். தொடர்ந்து அமளி நிலவியதால் சபையை 3 மணி வரை அவர் ஒத்திவைத்தார்.

பின்னர் 3 மணிக்கு அவை மீண்டும் கூடியபோதும் அமளி நீடித்தது.  அப்போது சபாநாயகர் இருக்கையில்  இருந்த ராஜேந்திர அகர்வால்  அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்களை எச்சரிக்கை விடுத்தும் பயன் எதுவும் இல்லை.  உறுப்பினர்கள் வேண்டுமென்றே அவை நடவடிக்கைகளை சீர்குலைக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதாக அவர் கூறினார்.  பின்னர் மாணிக்கம் தாகூர்,ஜோதிமணி, பிரதாபன்,ரம்யா ஹரிதாஸ் ஆகிய 4 எம்பிக்களை கூட்ட தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யும் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதே போல் மாநிலங்களவை நேற்று மதியம் 2 மணிக்கு கூடியபோது எதிர்க்கட்சி எம்பி.க்கள் அனைவரும் எழுந்து பணவீக்கம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று கோரினர். அதற்கு மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஸ் அனுமதி அளிக்காததால்  எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மைய பகுதிக்கு சென்று  கோஷங்கள் எழுப்பினர். இதனால்  சபை 3 மணி வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார். பின்னர் சபை மீண்டும் கூடிய போது விலைவாசி உயர்வு குறித்து எதிர்க்கட்சியினர் கோஷம் எழுப்பியதால் மாலை 4 மணி வரை அவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories: