×

ஆவடி பேருந்து நிலையம் அருகே குண்டும், குழியுமான சாலைகள்: வாகன ஓட்டிகள் கடும் அவதி

ஆவடி: ஆவடி பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாக கிடப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட எச்.வி.எப். மெயின்ரோடு வழியாக ஆவடி ரயில் நிலையம், பேருந்து நிலையம், கோவில்பாதகை, வீராபுரம், செங்குன்றம், மோரை, வெள்ளனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றன.

இந்த சாலையில் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் மாநகர பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் செல்கின்றன. காலை மற்றும் மாலை நேரங்களில் மிகுந்த பேருந்து நெரிசல் அதிகளவில் காணப்படும்.  மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையை சீரமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும், ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனப்போக்கையே காட்டி வருகின்றனர். மேலும், பல இடங்களில் திடீர் பள்ளம் தோன்றுவதால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். அதேபோல், மாநகர பேருந்துகள் இந்த திடீர் பள்ளத்தில் ஏறி இறங்குவதால், பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் பழுதடைகின்றனர்.

இந்த பகுதிகளில் சரியான திட்டமிடல் இல்லாமல் புதிய சாலை அமைக்கப்பட்டு வருகிறது. சாலை அமைக்கப்பட்டவுடன், பல்வேறு பணிகளுக்கு சாலையில் மீண்டும் பள்ளம் தோண்டப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். அவ்வப்போது, சிறிய சிறிய விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே ஆவடி மாநகராட்சி அதிகாரிகள், இந்த சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும் என மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags : Aavadi , Bumpy and potholed roads near Aavadi bus stand: Motorists suffer a lot
× RELATED ஆவடி அருகே துப்பாக்கி முனையில் ரூ.1.50...