ஸ்ரீகோலம் கொண்ட அம்மனுக்கு 2,000 பேர் அக்னி சட்டி ஊர்வலம்: முதுகில் அலகு குத்தி கிரேனில் வந்தனர்

திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள கோலம் கொண்ட அம்மன் கோயிலில் கடந்த 22ம் தேதி மகா உற்சவ விழா தொடங்கியது. இதையொட்டி பந்தக்கால் நடும் நிகழ்ச்சியும் அம்மனுக்கு திருக்குளத்தில் இருந்து தாய்வீட்டு சீர்வரிசையும் கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

அம்மனுக்கு சந்தன காப்பு, விநாயகருக்கு விபூதி காப்பு, துர்கை அம்மனுக்கு குங்குக காப்பும் நடைபெற்றது. அன்றைய தினம் மாலை வீரராகவர் கோயிலில் இருந்து அம்மனுக்கு சீர்வரிசை, பட்டுப்புடவை, மாலை, மரியாதை மங்கள மேளம் இசைக்க தாரை தப்பட்டை முழங்க வாண வேடிக்கையுடன் கொண்டு வரப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 23ம் தேதி அம்மனுக்கு அபிஷேகமும் நளாயினியின் ஆன்மீக சொற்பொழிவும் நடைபெற்றது.

ஆடி மாதம் 2வது வார ஞாயிற்றுக்கிழமையான நேற்றுமுன்தினம், முற்பகல் அம்மனுக்கு கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சியும் மாலை 6 மணிக்கு வீரராகவர்கோயில் திருக்குளத்தில் இருந்து ஆண், பெண் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அக்னி சட்டி ஏந்தி வந்தனர். பலர் முகம், முதுகில் அலகு குத்தி இளநீர் கொத்தாக கட்டி இழுத்து வந்தும் வேண்டுதலை நிறைவேற்றினர். முதுகில் அலகு குத்தி ஆட்டோ, கார் போன்ற வாகனங்களையும் திருக்குளத்திலிருந்து கோலம் கொண்ட அம்மன் கோயில் வரை இழுத்து வந்தனர். முதுகில் அலகு குத்தி கிரேனில் தொங்கியபடி வந்தும் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.

ஸ்ரீ கோலம் கொண்ட அம்மனுக்கு நடைபெற்ற ஆடி விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதனால் திருவள்ளூர் நகரமே விழாக் கோலம் பூண்டிருந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை தக்கார் கு.நாராயணன், நகர விழா குழுவினர் மற்றும் முகமதலி தெரு பொது மக்கள் செய்திருந்தனர்.

Related Stories: