மூணாறில் சுற்றுலா சென்றபோது நகைக்கடையில் 5 சவரன் அபேஸ் சென்னையை சேர்ந்த பெண் கைது: பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்

சென்னை: கேரள மாநிலம் மூணாறு சர்வதேச சுற்றுலாத்தலமாகும். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இங்கு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தற்போது மழைக்காலம் என்ற போதிலும் சுற்றுலா பயணிகள் வருகை குறையவில்லை. சனி, ஞாயிறு உள்பட விடுமுறை தினங்களில் மூணாறில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.

இங்குள்ள ஜிஎச் சாலையில் ஒரு பிரபல நகைக்கடை உள்ளது. கடந்த 16ம் தேதி இந்த நகைக்கடைக்கு டிப்டாப் உடையுடன் ஒரு பெண் வந்து உள்ளார். நகைகளை பார்த்த பிறகு, 3 ஜோடி கம்மல், ஒரு பிரேஸ்லெட்டை அவர் வாங்கி உள்ளார். அதற்கு ₹78,000 கொடுத்தார். அப்போது கடையில் இருந்த 5 சவரன் எடை உள்ள ஒரு செயின் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.

பின்னர் கணவனுடன் வந்து, அந்த செயினை வாங்குவதாக கூறிவிட்டு ₹1000 முன் பணமாக கொடுத்துவிட்டு சென்று உள்ளார். இரவில் ஊழியர்கள் நகைகளை பரிசோதித்த போது 38 கிராமுக்கும் மேல் எடை உள்ள 2 செயின்களை காணவில்லை. அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், கடையில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பரிசோதித்தனர்.அதில் டிப் டாப் உடையணிந்து வந்த பெண், கடை ஊழியர்களுக்கு தெரியாமல் 2 செயின்களையும் நைசாக திருடி பேக்கில் போட்டு செல்வது பதிவாகி இருந்தது. இதுகுறித்து கடை உரிமையாளர் மூணாறு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இது தொடர்பாக மூணாறு டிஎஸ்பி மனோஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் மூணாறு பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை பரிசோதித்து பார்த்தனர். அப்போது நகையை திருடிய பெண் சென்னை பதிவெண் கொண்ட ஒரு வேனில் ஏறிச்செல்வது தெரியவந்தது. தொடர்ந்து நடந்த தீவிர விசாரணையில் அந்த பெண் சென்னை ராயபுரத்தை சேர்ந்த ரகானா உசேன் பாரூக் (47) என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து தனிப்படை போலீசார் சென்னையில் மேற்கண்ட முகவரிக்கு சென்றனர். அங்கு செல்வந்தர்கள் வசிக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து ரகானாவை கைது செய்தனர். பின்னர் போலீசார் அவரை மூணாறு கொண்டு சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ரகானா நகைகளை திருடியது அவரது கணவர் உள்பட வேறு யாருக்கும் தெரியாது என்றும், இவர் பணக்கார குடும்பத்தை சேர்ந்த பெண் எனவும் இடுக்கி மாவட்ட எஸ்பி குரியாக்கோஸ் தெரிவித்தார்.

Related Stories: