×

உலக நாடுகள் பங்கேற்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டி; அனைத்து பணிகளும் நிறைவு பெற்று வீரர், வீராங்கனைகளை வரவேற்க தயார்: களை கட்டியது மாமல்லபுரம்

சென்னை: உலக நாடுகள் பங்கேற்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு அனைத்து பணிகளும் முடிந்து, வீரர், வீராங்கனைகளை வரவேற்க மாமல்லபுரம் தயாராக உள்ளது. இதனால், மாமல்லபுரம் களைகட்ட தொடங்கியுள்ளது. உலக நாடுகள் பங்கேற்க இருக்கின்ற, ‘44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி 2022’ தமிழகத்தில், உலக புகழ் பெற்ற சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் வரும் 29ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடக்க உள்ளது. சுமார், 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாட உள்ளனர். 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி 2022 ரஷ்யா நாட்டில் இந்தாண்டு நடைபெற இருந்தது. அங்கு, உக்ரைன் நாட்டுக்கும் ரஷ்யா நாட்டுக்கும் போர் நடைபெற்று கொண்டிருப்பதால், உலக செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டியை நடத்தும் முடிவை ரஷ்யா கைவிட்டது.

இந்நிலையில், பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டில் சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டியை நடத்த கடும் போட்டி போட்டது. இந்த நிலையில், இந்தியாவில், அதாவது தமிழ்நாட்டில் முக்கிய சுற்றுலா தலமான மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள போர் பாயிண்ட் - செரட்டான் நட்சத்திர ரிசார்ட்டில் இப்போட்டியை நடத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதையடுத்து, பல்வேறு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு ₹92 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது. இதில், போட்டி நடைபெறும் இடத்தில் 22 ஆயிரம் சதுர அடியில் உள்ள அரங்கத்தில் அதிக வெளிச்சம் தரக் கூடிய மின் விளக்கு பொருத்துவது, இணைய தளத்துக்கு தேவையான மின் வயர்களை கொண்டு வருவது, கழிப்பறைகளை புதுப்பிப்பது, இதேப்போல், முதல் அரங்குக்கு அருகே 52 ஆயிரம் சதுர அடியில் தற்காலி அரங்கம் அமைப்பது, புதிய சாலைகள் அமைப்பது, பிரமாண்டமான வாகன நிறுத்தம், மின்விளக்கு அமைப்பது, மின் கம்பங்கள் நடுவது, பேவர் பிளாக் பதிப்பது, பரிசோதனை மையம், ஊடகங்களுக்கு அறை, ஆம்புலன்ஸ் நிறுத்துமிடம், காவலர்கள் ஓய்வு அறை உள்ளிட்ட பல்வேறு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாமல்லபுரம் நகரம் முழுவதும் அழகுப்படுத்த ₹ 8 கோடி அரசு கூடுதலாக ஒதுக்கியது. இதில், வீரர் வீராங்கனைகள் போட்டி நடக்க இடத்திற்கு வரும் வழியில் உள்ள குளம், குட்டைகளை சீரமைப்பது, பஸ் நிறுத்தத்தை வண்ணம் தீட்டுதல், சாலைகளை பழுது பார்த்தல், சாலைகளின் இருபுறமும் கிரானைட் கற்கள், பேவர் பிளாக் பதிப்பது, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது, மாமல்லபுரம் முழுவதும் பழைய மின் விளக்குகளை அகற்றி, புதிய மின் விளக்குகள் பொருத்துவது, சுவர்களில் பழங்கால ஓவியங்கள் வரைந்து அழகு படுத்துவது, மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு வண்ணம் தீட்டுவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடிந்து வீரர், வீராங்கனைகளை வரவேற்க மாமல்லபுரம் தயார் நிலையில் உள்ளது.

இந்நிலையில், போட்டியின் தொடக்க நிகழ்ச்சி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வரும் 28ம் தேதி நடக்கிறது. நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். இதில், ஒன்றிய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உலக செஸ் கூட்டமைப்பு மற்றும் இந்திய செஸ் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். போட்டியில், உலகம் முமுவதும் உள்ள 187 நாடுகளை சேர்ந்த ஆண்கள் பிரிவில் 188 அணிகளும், பெண்கள் பிரிவில் 162 அணிகள் என மொத்தம் 350 அணிகள் பங்கேற்கின்றன.

இதில், 22 ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ள முதல் அரங்கில் ஆண்கள் பிரிவில் 56 அணிகளும், 52 ஆயிரம் சதுர அடியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட இரண்டாவது அரங்கில் 132 அணிகளும், இதேப்போல் பெண்கள் பிரிவில் முதல் அரங்கில் 42 அணிகளும், 2வது அரங்கில் 120 அணிகளும் அசத்த உள்ளனர். தினமும், 175 போட்டிகள் நடத்தப்படுகிறது. மொத்தம், 707 செஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு, செஸ் போர்டுக்கும் ஒரு சீரியல் நெம்பர் வழங்கி அந்த சீரியல் நெம்பரை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு, உலகம் முழுவதும் அதனை கண்டுகளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வீரர், வீராங்கனைகள் தங்க 2600 க்கும் மேற்பட்ட அறைகள் பல்வேறு வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளது. தமிழக, முதல்வரின் உத்தரவுப்படி வீரர்களுக்கு உடநலக்கு குறைவு ஏற்பட்டால், அவர்களுக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள பல்வேறு அம்சங்களுடன் கூடிய 30 க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ், 7 மருத்துவக் குழுக்களில் 198 மருத்துவர்கள், 74 செவிலியர்கள் மற்றும் 162 முன் களப்பணியாளர் தயார் நிலையில் உள்ளனர்.

போட்டியில், பங்கேற்பவர்களுக்கு 47 வகையான உணவு தயாரித்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பரிசோதனை செய்த பிறகே வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்படும். மேலும், அவர்களின் மனவலிமையை உறுதிபடுத்த யோகா பயிற்சியாளர்களும் யோகா கற்பிக்க உள்ளனர். குறிப்பாக, போட்டியில் பங்கேற்க வரும் வீரர்களுக்கு தமிழக அரசு மூலம் தலா ₹2 இலட்சம் காப்பீடு செய்துள்ளது. போட்டி, நடைபெறும் ரிசார்ட்டில் ஆகஸ்ட் 2, 5, 6 ஆகிய தேதிகளில் தமிழ் பண்பாடு, கலாச்சாரத்தை எடுத்து சொல்லுகின்ற வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. போட்டியில், பங்கேற்க உள்ள வீரர், வீராங்கனைகளின் வருகை, நிகழ்வுகள், புறப்பாடு விபரங்கள் பற்றிய கால அட்டவணை மற்றும் திட்டமிடல்,  செயல்பாடுகள் பணிகளுக்காக மாமல்லபுரத்தில் உள்ள  தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக விடுதி மாடியில் தனி அலுவலகம் இயங்கி வருகிறது. \\”செஸ் ஒலிம்பியாட்\\” போட்டி ஏற்பாடு பணிகள் தொய்வின்றி வேகமாக செய்வதற்காக உயரழுத்த மின் தடம், வயர்லெஸ், இணையதளம், தடையில்லா மின்சாரம், குடிநீர், கழிப்பறை, வாகன நிறுத்துமிடம், புதிய அரங்கம் போன்ற பல்வேறு அடிப்படை வசதிகளை முதற்கட்டமாக விரைந்து முடிக்கப்பட்டுள்ளது.

Tags : World Chess Olympiad ,Mamallapuram ,Weed , World Chess Olympiad; All the work completed and ready to welcome the players: Mamallapuram was built by Weed
× RELATED மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்; 7 அடி உயரம் எழுந்த அலைகள்: மீனவர்கள் அச்சம்