×

உயிரைக் கொடுத்து கோட்டை தொட்ட கபடி வீரர்: கடலூர் அருகே சோகம்

சென்னை: கடலூர் மாவட்டம் முத்தாண்டிக் குப்பம் அருகே  உள்ள மானடிக் குப்பத்தில் நேற்று முன்தினம் இரவு மாவட்ட அளவிலான கபடிப் போட்டி நடந்தது. சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து பல்வேறு கபடி அணிகள் போட்டியில் பங்கேற்றன.
அதில் பண்ரூட்டி வட்டம், கடாம்புலியூர் அருகே உள்ள பெரியபுறங்கணி கிராமத்திலும் ஒரு அணியும் போட்டியில் கலந்துக் கொண்டது. அந்த அணியில் முருகன் தெருவைச் சேர்ந்த  விமல்ராஜ்(21) என்பவரும் இடம் பெற்றிருந்தார்.  சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில்  பிஎஸ்சி 2ம் ஆண்டு மாணவர்.

ரெய்டராக பாடிச் சென்று புள்ளிகள் குவிப்பதில் விமல்ராஜ் வல்லவர். கூடவே சேலத்தில் உள்ள கபடி அகடமி ஒன்றில்  கபடி பயிற்சியும் பெற்று வந்தார். மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர் விமல்ராஜ். மானடிகுப்பத்தில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்கவே சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

ஆட்டம் ஒன்றில் பெரியபுறங்கணி-கீழகுப்பம் அணிகள் மோதின. அப்போது  தனது அணிக்காக  ரெய்டு சென்ற விமல்ராஜ், எதிரணி வீரர்களை தொட்டுவிட்டு நடுக்கோட்டை நோக்கி நகர்ந்தார். எதிரணி வீரர்கள் மடக்கி பிடிக்க முயன்ற போது பாய்ந்துச் சென்று நடுக்கோட்டை தொட்டார். பிறகு எழுந்தவர் அப்படி தடுமாறி சரிந்து மயங்கினார். களத்தில் இருந்த வீரர்கள் உடனடியாக விமல்ராஜை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள்  ‘விமல் ராஜ்’ ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

போட்டிக் களத்திலேயே அணிக்காக விமல்ராஜ் உயிரை விட்டது,  கபடி ரசிகர்களை மட்டுமன்றி, அந்த பகுதியையே சோகமாக்கியது. இதற்கிடையில் விமல்ராஜ் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு கொண்டுச் சென்ற போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விமல்ராஜின் கடைசி நேர வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது.

Tags : Kabaddi ,Cuddalore , Kabaddi player who gave his life and touched the fort: Tragedy near Cuddalore
× RELATED ஆட்டோ மீது லாரி மோதியதில் இருவர் உயிரிழப்பு