×

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை தேவை: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நேற்று  எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: கடந்த 20ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 6  இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது தமிழகத்தை சேர்ந்த 92 மீன்பிடி படகுகள் இலங்கை வசம் உள்ளது. அவற்றில் சில படகுகள் 2018ம் ஆண்டில் சிறைபிடிக்கப்பட்டதால், அவை முற்றிலும் சேதம் அடையக்கூடும்.

படகின் உரிமையாளர்கள் இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, அவர்களது படகிற்கான உரிமையை கோர வேண்டுமென்ற நிபந்தனையின் பேரில், கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். தற்போது இலங்கையில் நிலவும் சூழ்நிலை காரணமாக அவர்களால் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை. இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் விடுவிக்க இந்திய அரசின் உயர்மட்ட அளவில் உறுதியான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கையை கோர வேண்டும். இலங்கையில் தற்போது நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மீன்பிடி படகின் உரிமையாளர்கள், இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க நான் வலியுறுத்துகிறேன். கடந்த சில மாதங்களில் கைது செய்யப்பட்ட 18 மீனவர்களை சொந்த நாட்டுக்கு அழைத்துவர உதவியதற்கு ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.

Tags : Tamil Nadu ,Sri Lankan Navy ,CM ,M.K.Stal ,Union ,Minister , Immediate action needed to release Tamil Nadu fishermen arrested by Sri Lankan Navy: CM M.K.Stal's letter to Union Minister
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை படை தாக்குதல்!