மருத்துவ மாணவர்களிடம் லட்சக்கணக்கில் நன்கொடை பிஷப் வீடு, அலுவலகத்தில் ரெய்டு: திருவனந்தபுரத்தில் அமலாக்கத்துறை அதிரடி

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் உள்ள சிஎஸ்ஐ பிஷப் ரசாலம் தர்மராஜின் வீடு, அலுவலகங்கள் உள்பட 4 இடங்களில் ஒரே சமயத்தில் ஒன்றிய அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குமரி எல்லை அருகே உள்ள காரக்கோணத்தில் சிஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் சேரும் மாணவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் நன்கொடை வசூலிப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சில மாணவர்களின் பெற்றோர் வெள்ளறடை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். கல்லூரியின் இயக்குனர் பென்னட் ஆபிரகாம், சிஎஸ்ஐ பிஷப் ரசாலம் தர்மராஜ் உட்பட சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு பின்னர் குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. ஆனால் குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் பிஷப் தர்மராஜ் ரசாலத்தின் பெயர் நீக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை அமலாக்கத்துறை விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி மோகனன் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.

இந்த விசாரணையில் அந்நிய செலாவணி சட்டத்தை மீறி பெருமளவு கருப்புப் பணத்தை பல்வேறு இடங்களில் முதலீடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் திருவனந்தபுரம் பாளையத்தில் உள்ள பிஷப் ரசாலம் தர்மராஜின் வீடு, அலுவலகம், காரக்கோணம் மருத்துவக் கல்லூரி மற்றும் சிஎஸ்ஐ சபை செயலாளர் பிரவீனின் வீடு ஆகிய 4 இடங்களில் ஒரே சமயத்தில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனையை தொடங்கினர். நேற்று இரவு வரை இந்த சோதனை நடந்தது. அப்போது பிஷப் தர்மராஜ் ரசாலம் வீட்டில் இருந்தார். அவரிடமும் பல மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

* லண்டன் செல்ல தயாராக இருந்தார்

சிஎஸ்ஐ சபை நடத்தும் ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக பிஷப் தர்மராஜ் ரசாலம் நேற்று லண்டனுக்கு செல்ல இருந்தார். அதற்கு முன்னதாக அமலாக்கத்துறையினர் அதிகாலையிலேயே சோதனையை தொடங்கியது  குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே சிஎஸ்ஐ சபை செயலாளர் பிரவீன் நேற்றிரவே குடும்பத்துடன் திருவனந்தபுரத்தில் இருந்து வெளியேறி விட்டார். அவர் சென்னை அல்லது வெளிநாட்டுக்கு சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Related Stories: