மாநிலங்களவை எம்பியாக இளையராஜா பதவி ஏற்பு

புதுடெல்லி: மாநிலங்களவை எம்பியாக இளையராஜா நேற்று பதவியேற்றுக் கொண்டார். கடந்த வாரம்  முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மாநிலங்களவைக்கான நியமன உறுப்பினர்களை அறிவித்தார். அதில் தமிழகத்தைச் சேர்ந்த இசையமைப்பாளர் இளையராஜாவும் ஒருவர் ஆவார். கடந்த 18ம் தேதி முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், புதிதாக நியமனம் செய்யப்பட்ட மாநிலங்களவை நியமன உறுப்பினர்கள் பதவி ஏற்று கொண்டனர். இதில் வெளிநாடு பயணம் மேற்கொண்டிருந்ததால் இளையராஜா திட்டமிட்டபடி பதவி ஏற்பில் கலந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை டெல்லி திரும்பிய இளையராஜாவுக்கு டெல்லி விமான நிலையத்தில் பாஜ கட்சியினர் வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து நேற்றைய தினம் மாநிலங்களவை பிற்பகல் 2 மணிக்கு கூடியவுடன் முறைப்படி நியமன உறுப்பினராக இளையராஜா பதவி ஏற்றுக்கொண்டார். தமிழில் பதவி ஏற்று கொண்ட அவர், தனக்கு வழங்கப்பட்டிருக்கும் அனைத்து பொறுப்புகளின் மீதும் நேர்மையாக இருப்பேன் எனவும் கடவுள் மீது ஆணையிடுவதாக கூறியும் பதவியேற்றுக் கொண்டார்.

Related Stories: