×

சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் அனைத்து வழக்குகளையும் சிறப்பு அமர்வில் விசாரிக்க வேண்டும்: ஐகோர்ட்டில் பொன் மாணிக்கவேல் கூடுதல் மனு தாக்கல்

சென்னை: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிறப்பு அமர்வில் விசாரணைக்கு பட்டியலிட வேண்டுமென்று முன்னாள் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனுவை தாக்கல் செய்துள்ளார். சிலைக் கடத்தல் வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய பொன் மாணிக்கவேல் தமிழக அரசுக்கு எதிராக 2019ல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். அப்போதைய தலைமை செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, டிஜிபியாக இருந்த டி.கே.ராஜேந்திரன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி அபய் குமார் சிங் ஆகியோருக்கு எதிராக இந்த அவமதிப்பு வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

அந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, பொன் மாணிக்கவேல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.செல்வராஜ் வாதிடும்போது, சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தை இரு நீதிபதிகள் கண்காணித்து வருவதால், அதனுடன் தொடர்புடைய வழக்குகளில் தனித்தனியாக உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. வெவ்வேறு அமர்வுகளில் வழக்குகள் பட்டியலிடப்படுவதால் அதில் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளால் குழப்பம் ஏற்படுகிறது. எனவே, சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் இதே அமர்வில் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும். அதுதொடர்பாக கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார். இதனை கேட்ட நீதிபதிகள் அந்த கூடுதல் மனுவை வரும் வெள்ளிக்கிழமை விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.

Tags : Anti-Idol Smuggling Unit ,Pon Manikavel ,ICourt , All cases of Anti-Idol Smuggling Unit to be heard in special session: Pon Manikavel files additional petition in IC
× RELATED தீ விபத்தில் சிக்கி சிறுநீரக...