கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி? மருத்துவமனையில் அனுமதி; விழுப்புரம் அருகே பரபரப்பு

விக்கிரவாண்டி: விழுப்புரம் அருகே தனியார் கல்லூரி மாடியில் இருந்து விழுந்து மாணவி படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் தற்கொலைக்கு முயற்சித்ததாக கூறப்படுகிறது. விழுப்புரம் அடுத்த கே.கே. ரோடு மணி நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் ரம்யா (18), விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பார்மசி கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.பார்ம் படித்து வருகிறார். இவர் நேற்று கல்லூரிக்கு சென்று காலை 9 மணியளவில் முதல் தளத்தில் நடந்த பாடப்பிரிவை முடித்துவிட்டு அதே தளத்தில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். பின்பு நீண்ட நேரம் ஆகியும் வகுப்பறைக்கு திரும்பாததால் சக மாணவர்கள் பதேடிபார்த்துள்ளனர்.

அப்போது மாணவி ரம்யா கழிவறை  உள்ள முதல் தளத்திலிருந்து கீழே விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். கல்லூரி நிர்வாகம் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மாணவிக்கு மூன்று இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், உடலில் ரத்தப்போக்கு அதிகம் இருப்பதால் சுயநினைவு இல்லாமல் இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மாணவி கீழே விழுந்த இடம், மற்றும் முதல் தளம் உள்ள பகுதிகளை விழுப்புரம் எஸ்பி ஸ்ரீநாதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது மாணவி எழுதி வைத்திருந்த இரண்டு வரி கடிதம் குப்பைத்தொட்டியில் இருந்தும், அவரது சீருடை பாக்கெட்டில் இருந்து மேலும் ஒரு கடிதமும், குடும்பப்புகைப்படம் ஒன்றும் போலீசாரிடம் சிக்கியுள்ளது. இதனை வைத்து மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து அவரது தாயார் தேவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி வளாகம், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பெற்றோரிடம் திண்டிவனம் இரண்டாவது குற்றவியல் நீதிபதி மாலதி விசாரணை நடத்தினார்.

Related Stories: