‘குரூப் 4 தேர்வு சரியாக எழுதலியே... இருந்த வேலையும் போச்சே...’ 10 வயது மகளை கொன்றுவிட்டு இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: தாராபுரம் அருகே பரிதாபம்

தாராபுரம்:  தாராபுரம் அருகே, குரூப் 4 தேர்வு சரியாக எழுதலியே, இருந்த வேலையும் போச்சே என்ற விரக்தியில், இளம்பெண் மகளை கொன்றுவிட்டு தானும் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே அலங்கியம் காமராஜர் நகரை சேர்ந்தவர் பூங்கொடி (28). இவரது கணவர் காளிதாஸ், மகள் வர்ஷா (10). காளிதாஸ் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, தாராபுரம் தனியார் பனியன் நிறுவனத்தில் பூங்கொடி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். மகள் வர்ஷா அலங்கியம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். இருவரும் அலங்கியத்தில் பூங்கொடியின் தாய் சரஸ்வதியுடன் வசித்து வந்தனர்.

கடந்த 2 மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்காக பூங்கொடி படித்து கொண்டிருந்தார். கடந்த 24ம் தேதி மூலனூரில் குரூப் 4 தேர்வை எழுதிவிட்டு வீட்டிற்கு வந்த பூங்கொடி, தேர்வில் கேள்விகள் கடினமாக இருந்ததால் சரியாக எழுதவில்லை, தேர்வுக்காக இருந்த வேலையையும் விட்டுவிட்டேன், இனி குடும்பம் நடத்த வருமானத்திற்கு என்ன செய்வது என தெரியவில்லையே என்று அக்கம்பக்கத்தினரிடம் விரக்தியுடன் கூறி புலம்பியுள்ளார். இந்நிலையில், நேற்று காலை மகள் வர்ஷாவை தூக்கில் கட்டி இறுக்கி கொலை செய்துவிட்டு, சேலையால் தானும்  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த அலங்கியம் போலீசார் வந்து, தாய், மகள் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: