×

விடுமுறை நாளில் வீட்டுக்கு வரவழைத்து மாணவிக்கு பாலியல் தொல்லை பெரியார் பல்கலை. பதிவாளர் கைது

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, பொறுப்பு பதிவாளரை போலீசார் கைது செய்தனர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் முழு கூடுதல் பொறுப்புடன் கூடிய பதிவாளராக, வேதியியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் கோபி (48) இருந்து வருகிறார். மாணவர்களுக்கு, முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கான வழிகாட்டி நெறியாளராகவும் உள்ள கோபி, பல்கலைக்கழக குடியிருப்பிலேயே வசித்து வருகிறார். விடுமுறை தினமான நேற்று முன்தினம், தன்னிடம் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வரும் மாணவி ஒருவரை, வீட்டுக்கு வரும்படி பதிவாளர் கோபி அழைத்துள்ளார். அங்கு வந்த மாணவிக்கு பாலியல் ரீதியிலான தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, உறவினர்களுக்கு தகவல் அளித்தார். அவரது உறவினர்கள் அங்கு வந்து பதிவாளரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த கோபி, சேலம் 5 ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார்.

இதுகுறித்து கருப்பூர் போலீசில் புகார் அளித்தார். அதில், சில நபர்கள் தன்னை தாக்கியதாகவும், செல்போனை பறித்துச் சென்றதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில், விடுமுறை நாளில் வீட்டுக்கு தன்னை அழைத்த பதிவாளர், பாலியல் தொல்லை கொடுத்ததாக, சம்பந்தப்பட்ட மாணவி கருப்பூர் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் மாநகர போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி, உதவி கமிஷனர் நாகராஜன் ஆகியோர், பதிவாளர் கோபியிடம் விசாரணை நடத்தினர்.
இதில், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, பதிவாளர் கோபியை கைது செய்தனர். இதேபோல் பதிவாளர் கோபி அளித்த புகாரின் பேரில், மாணவியின் உறவினர்கள் 3பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தற்போது பாலியல் புகாருக்குள்ளான பேராசிரியர் கோபி மீது, ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பல்கலைக்கழக மாணவிகள் சிலர் புகார் ஒன்றை அளித்திருந்தனர். அதில், விடுமுறை தினத்தில் வீட்டு வேலை செய்ய கட்டாயப்படுத்துவதாகவும், பாலியல் தொல்லை கொடுப்பதாகவும் கூறியிருந்தனர். அதற்கென அமைக்கப்பட்ட விசாரணை குழுவின் விசாரணையிலும், இந்த குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. ஆனால், அப்போதிருந்த துணைவேந்தர், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, 3 ஆண்டுகளுக்கு ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க தடை விதித்தார். அதன் பின்னரும், பாலியல் தொல்லை, போலி பில் தயாரிப்பு என அடுத்தடுத்து பல்வேறு புகார்கள் பதிவாளர் கோபி மீது தெரிவிக்கப்பட்டன. ஆனால் அவரது செல்வாக்கால், அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் தப்பி வந்தார். தற்போது மாணவி கொடுத்த பாலியல் புகாரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதால், மேலும் பல புகார்கள் அடுத்தடுத்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Periyar University , Periyar University sexually harassed a student by calling her home on a holiday. Registrar arrested
× RELATED ஊழல் பல்கலைக்கழகங்களும்… கைதாகும்...