×

எடப்பாடி பதவிக்கு வைத்திலிங்கம் நியமனம்

சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் எம்எல்ஏ நியமிக்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார். ஏற்கனவே இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக இடைக்கால ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜெ.சி.டி.பிரபாகர் உள்ளிட்ட பலரையும் நீக்கி வருகிறார். இதற்கு பதிலடியாக ஓ.பன்னீர்செல்வமும் அதிமுக ஒருங்கிணைப்பாளராக தொடர்ந்து நான்தான் செயல்பட்டு வருகிறேன் என்று கூறி, எடப்பாடி ஆதரவாளர்களை நீக்கி வருகிறார். இப்படி இரண்டு பேரும் போட்டி போட்டு நீக்கி வருவதால் அதிமுக கட்சி யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று ஒரு முடிவு எடுக்க முடியாமல் தொண்டர்கள் தவித்து வருகிறார்கள். நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம்தான் இதில் இறுதி தீர்ப்பு வழங்க வேண்டும். இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறி இருப்பதாவது: அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து ஆர்.வைத்திலிங்கம் எம்எல்ஏ இன்று முதல் விடுவிக்கப்படுகிறார். அதிமுக தலைமை கழக நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்கள் கீழ்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள். அதன்படி, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் - ஆர்.வைத்திலிங்கம் எம்எல்ஏ (முன்னாள் அமைச்சர்) நியமிக்கப்பட்டுள்ளார். (ஏற்கனவே அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி இருந்தார். அதிமுக பொதுக்குழுவில் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி நீக்கப்பட்டு, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.) அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்களாக கு.ப.கிருஷ்ணன் (முன்னாள் அமைச்சர்), ஜெ.சி.டி.பிரபாகர் (அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு, துணை செயலாளர்), பி.எச்.மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ (அமைப்பு செயலாளர்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிமுக தொண்டர்கள் அனைவரும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Vaithilingam ,Edappadi , Vaithilingam appointed for the post of Edappadi
× RELATED எனக்கு இனி அதிமுக தேவை இல்லை: தேர்தல்...