×

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் சிறுமிகளுக்கு உடனே மருத்துவ பரிசோதனை: போலீசாருக்கு அறிவுறுத்த டிஜிபிக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சிறுமிகளை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என்று டிஜிபிக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனது 17 வயது மகள் 2021ல் கடத்தப்பட்டதாகவும், அவரை மீட்டுத் தரக் கோரியும் உயர் நீதிமன்றத்தில் அவரின் தந்தை ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிறுமியை வேப்பூர் அருகே மீட்டுள்ளதாகவும், குழந்தைகள் நலக் குழு முன் ஆஜர்படுத்தியுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  

இந்நிலையில், தனது மகள் கடத்தப்பட்ட விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யவில்லை. மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி வாக்குமூலம் பெறவில்லை. மருத்துவ பரிசோதனை நடத்தவில்லை எனக்கூறி பெண்ணின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.சரவணகுமார் ஆஜரானார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் போக்சோ சட்டப்படியும், குற்ற விசாரணை முறைச்சட்டப்படியும் போலீசார் செயல்படவில்லை.  பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக பெண் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி வாக்குமூலம் பெறவேண்டும். அவர்களுக்கு உடனே மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் விதிமுறை வகுத்துள்ளது. இந்த விதிமுறைகளையும், போக்சோ சட்ட விதிகளையும் பின்பற்ற வேண்டும் என்று அனைத்து போலீசாருக்கும் சுற்றறிக்கையை டிஜிபி அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Tags : DGP , Immediate medical examination of sexually assaulted girls: Court directs DGP to instruct police
× RELATED வீட்டை குத்தகைக்கு எடுத்து அடமானம்...