×

தமிழ்நாடு யாதவ மகாசபை சார்பில் அமெட் பல்கலையில் ஐஏஎஸ் அகாடமி இலவச பயிற்சி மையம் தொடக்கம்

துரைப்பாக்கம்: கானாத்தூரில் உள்ள அமெட் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று தமிழ்நாடு யாதவ மகாசபை சார்பில் கோபாலகிருஷ்ணன் ஐஏஎஸ் அகாடமி இலவச பயிற்சி மையம் துவக்க விழா நடைபெற்றது. தமிழ்நாடு யாதவ மகாசபை சார்பில், கிழக்கு கடற்கரை சாலை, கானாத்தூரில் உள்ள அமெட் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று கோபாலகிருஷ்ணன் ஐஏஎஸ் அகாடமி சிவில் சர்வீஸ் தேர்வுக்கான இலவச பயிற்சி மைய துவக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவரும் அமெட் பல்கலைக்கழக வேந்தருமான நாசே ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஐஏஎஸ் அகாடமி இலவச பயிற்சி மையத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

இதில் அமெட் பல்கலைக்கழக இணைவேந்தர் நாசே ராஜேஷ், துணைவேந்தர் திருவாசகம், சுசீலா ராமச்சந்திரன், தமிழ்நாடு யாதவ மகாசபை பொது செயலாளர் செல்வராஜ், மாநில சட்ட செயலாளர் சபாபதி, மாநில பொருளாளர் எத்திராஜ், முதன்மை செயலாளர்  தர்மேந்திர பிரதாப் யாதவ், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் செந்தாமரைக்கண்ணன், பாலசுப்பிரமணியன், முன்னாள் எம்எல்ஏ மலேசியா பாண்டியன், மூத்த வழக்கறிஞர் சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் அமைச்சர் பெரியகருப்பன் பேசுகையில், நாசே ராமச்சந்திரனால் உருவாக்கப்பட்டு ஆலவிருட்சமாக வளர்ந்திருக்கின்ற அமெட் பல்கலைக்கழக வளாகத்தில், பல லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு,தொழில் முனைவோருக்கு வாழ்வளித்து வழிகாட்டியாக விளங்கிய ஐயா கோபாலகிருஷ்ணன் பெயரில், யாதவ மகாசபை தலைவராக நாசே ராமச்சந்திரன் பொறுப்பேற்று சிறப்பு சேர்த்திருக்கிறார். நாம் மட்டும் வாழாமல் நம்முடைய சமுதாயத்தையும் மற்ற சமுதாயத்தையும் வாழ்விக்க வேண்டும் என்கிற கருணை கடலாக விளங்கி இருக்கிறார். இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்தி, நல்ல நிலையை அடைய வேண்டும். தற்போது கோபாலகிருஷ்ணன் பெயரில் ஐஏஎஸ் அகாடமி உருவாக்கி இருக்கிறார். இதில் தேர்வு செய்யப்பட்ட 30 மாணவர்களும் ஐஏஎஸ் என்கிற மூன்று எழுத்தை வாங்கி செல்ல வேண்டும் என அமைச்சர் பெரியகருப்பன் வலியுறுத்தி பேசினார்.

Tags : Tamil Nadu ,Yadava Mahasabha ,IAS Academy Free Training Center ,Amed , Tamil Nadu Yadava Mahasabha Launches IAS Academy Free Training Center at Amed University
× RELATED ரேசன் கடைகளில் மே மாதத்திற்கான...