திருவள்ளூர் மாணவி சந்தேக மரண வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்!: விசாரணை அதிகாரியாக காவல் ஆய்வாளர் திரிபுர சுந்தரி நியமனம்..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே கீழச்சேரியில் பள்ளி மாணவி சந்தேக மரண வழக்கு விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி காவல் ஆய்வாளர் திரிபுர சுந்தரி நியமிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரியில் இயங்கி வரும் சேக்ரெட் ஹார்ட் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி இன்று காலை விடுதியில் சடலமாக கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் மப்பேடு போலீசார் பள்ளிக்கு நேரில் சென்று மாணவியின் உடலை கைப்பற்றி திருவள்ளூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலில் மாணவி விஷ பூச்சி கடித்து இறந்ததாக ஒரு தகவல் பரவியது.

பிறகு, போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மாணவி தற்கொலை செய்துகொண்டது உறுதியானது. தொடர்ந்து கீழச்சேரி பள்ளியில் தடயவியல் நிபுணர் குழு ஆய்வு செய்து வருகிறது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிஐஜி சத்யபிரியா, கீழச்சேரி பள்ளி தற்கொலை வழக்கு சந்தேக மரண வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு மாணவியின் சடலம் தூக்கிட்ட நிலையில் தான் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உள்ளது என்று தெரிவித்தார். உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், திருவள்ளூர் மாணவி சந்தேக மரண  வழக்கு விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி காவல் ஆய்வாளர் திரிபுர சுந்தரி நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, மாணவி தற்கொலை குறித்து பள்ளி நிர்வாகம் முறையாக தெரிவிக்கவில்லை என உறவினர்கள் புகார் தெரிவித்து பொதட்டூர்பேட்டை- திருத்தணி சாலையில் போராட்டம் நடத்தினர். பாதிக்கப்பட்ட குடும்பம் மட்டுமில்லாமல் விடுதியில் உள்ள மற்ற மாணவிகளின் பெற்றோரும் சம்பவ இடத்தில் குவிந்துள்ளதால் பதட்டம் நிலவி வருகிறது.

Related Stories: