சின்னசேலம் தனியார் பள்ளி கலவர விவகாரம்; தனித்தனியே 40 பிரிவின் கீழ் 4 வழக்கு பதிவு.! இதுவரை 311 பேர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் கடந்த 13ம் தேதி மதி என்ற மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் கடந்த 17ம் தேதி சில அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. அப்போது பள்ளியை சேதப்படுத்தி, பள்ளி பேருந்துகளுக்கு தீ வைத்து கொளுத்தினர். மாணவியின் தாய் செல்வி கொடுத்த புகாரின் பேரில் சந்தேக மரணம் என முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 17ம் தேதி தனியார் பள்ளி கலவரம் குறித்து மூன்று வழக்குகள் தனித்தனியே பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டர் பாபு பொது சொத்துகளை சேதப்படுத்தியதாக சின்னசேலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் 12 பிரிவின் கீழும், கலவரக்காரர்கள் போலீசாரை தாக்கியது, அரசு பணி செய்யவிடாமல் தடுத்தது, பொருட்களை திருடிச் சென்றது குறித்து வட்டாட்சியர் நடராஜன் கொடுத்த புகாரின் பேரில் 15 பிரிவின் கீழும், கலவரக்காரர்கள் போலீசாரை தாக்கியது.

போலீஸ் வாகனத்தை சேதப்படுத்தியது குறித்து சேலம் மாவட்டம் ஆயுதப்படை வாகன பிரிவு ஆய்வாளர் ராஜ்குமார் கொடுத்த புகாரின் பேரில் 12 பிரிவின் கீழும் வழக்கு பதிவு செய்துள்ளனர். மொத்தமாக 40 பிரிவின் கீழ் தனித்தனியாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாணவி இறந்த விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கலவர வழக்கில் 306 பேர் கடலூர், திருச்சி, வேலூர் ஆகிய மூன்று மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுவரை பள்ளி விவகாரத்தில் 311 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: