×

கடவுளின் பெயரால் பதவிப் பிரமாணம்!: மாநிலங்களவை எம்.பி-யாக பதவியேற்றார் இசையமைப்பாளர் இளையராஜா..!!

டெல்லி: இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். விளையாட்டு, சமூக சேவை, கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மாநிலங்களவைக்கு 12 பேரை நியமன எம்.பி.க்களாக குடியரசுத் தலைவர் நியமிக்கலாம். அதன்படி தமிழகத்தை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, மாநிலங்களவை நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டார். இதற்கிடையே கடந்த வாரம் திங்களன்று நடந்த பாராளுமன்ற கூட்ட தொடரின் போது நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டோர் பதவியேற்றுக்கொண்டனர். ஆனால் அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றதால் இளையராஜா அன்று பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை என தகவல் வெளியானது.

இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை எம்.பி-யாக பதவியேற்றுக்கொண்டார். பதவி பிரமாணத்தில், மாநிலங்களவையின்  உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் இளையராஜா எனும் நான், சட்டத்தினால் நிறுவப்பட்டுள்ள இந்திய அரசியல் சட்டத்தின் மீது உண்மையான பற்றார்வமும், பற்று உறுதியும் கொண்டிருப்பேன் என்றும் இந்தியாவின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் உறுதியாக பற்றிருப்பேன் என்றும் நான் இப்போது ஏற்கவிருக்கும் கடமையினை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்றும் கடவுளின் பெயரால் ஆணையிட்டு கூறுகிறேன் என்று தெரிவித்தார்.

முன்னதாக, மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பின்  இளையராஜா முதன்முறையாக டெல்லிக்கு சென்றார். விமான நிலையத்தில் அவருக்கு பாரதிய ஜனதா கட்சியினர் மேளதாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பின்னர், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை இளையராஜா சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Tags : God ,Ilayaraja ,Rajya Sabha , Rajya Sabha MP, Music Composer Ilayaraja, appointed
× RELATED தேவ ரகசியத்தை உடைக்கலாமா? : ஜோதிட ரகசியங்கள்