மதக்கலவர சூழல் நிலவுவதை பாஜ ஆதாயமாக நினைக்கிறது: கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

கோவை: ‘‘மதக்கலவர சூழல் இருந்து கொண்டே இருப்பது தனக்கு ஆதாயம்’’ என பாஜ நினைக்கிறது என்று கே.பாலகிருஷ்ணன் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் கோவை மசக்காளிபாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான பாஜ அரசு, வரலாறு காணாத பணவீக்கத்தை, பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. பண வீக்கம் 8 சதவிகிதம் என சொன்னாலும், உண்மையில் சில்லரை வணிகத்தோடு ஒப்பிட்டு பார்த்தால் 10 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருக்கும் என்ற நிலையுள்ளது.

அந்நிய செலாவணி இருப்பு படிப்படியாக குறைந்து கொண்டே போகிறது. இதுபோன்ற ஒரு நிலைதான் இலங்கையில் ஏற்பட்டது. அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாததன் காரணமாகத்தான் அந்நாடு டாலரில் வாங்க வேண்டிய பெட்ரோலிய பொருட்கள், எரிபொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. கடந்த மூன்று மாதங்களாக அங்கு மக்கள் பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற ஒரு நெருக்கடிதான் இந்தியாவும் சந்தித்து வருகிறது. டாலர் கையிருப்பு படிப்படியாக தேய்ந்து கொண்டே இருக்கிறது. வேலையின்மை 9 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. விவசாயம் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது.

இந்த நெருக்கடி குறித்து பேச அனுமதிப்பதில்லை. ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் எந்தெந்த வார்த்தைகளை பேசக்கூடாது என்கிற பட்டியல் போடுகிறார்கள். இந்த பட்டியலை பார்த்தால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெறும் பார்வையாளர்களாகவே இருக்க வேண்டும் என பாஜ நினைப்பதாக தெரிகிறது. நாடு எப்போதும் மதக்கலவர சூழல் இருந்து கொண்டே இருப்பது தான் தனக்கு ஆதாயம் என பாஜ நினைக்கிறது. இத்தகைய நிலையில் இருந்து நாட்டை பாதுகாக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்மொழியும் இயக்கங்களை வெற்றிகரமாக்கிடவும், அதில் பொதுமக்கள் திரளாக பங்கேற்கவைப்பதிலும் கட்சியின் ஊழியர்கள் முனைப்போடு செயல்பட வேண்டும். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் பேசினார்.

Related Stories: