நாமக்கல்லில் பெரியார் சிலை உடைப்பு... அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் குவிப்பு

நாமக்கல்: நாமக்கல்லில் தந்தை பெரியார் சிலை உடைக்கப்பட்ட நிலையில் அதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கலில் 1993-ம் ஆண்டு தந்தை பெரியார், அண்ணா மற்றும் எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலைகளும் கடந்த சேலம்- மங்களம் பிரிவு சாலை அருகே வைக்கப்பட்டது. திறந்த வெளியில் இருந்த சிலைகள் அதிமுக சார்பில் பராமரிக்கப்பட்டு வந்தது. 2018ம் ஆண்டு 3 சிலைகளுக்கும் மர்ம நபர்கள் காவித்துணி அணிவித்து சென்றதால் சிலைகளை பாதுகாக்கும் வகையில் கம்பி வலை பொருத்தப்பட்டது. இந்த நிலையில் 3 சிலைகளையும் சுற்றி வைத்திருந்த கம்பி வலைகள் பெயர்ந்த நிலையில், தந்தை பெரியார் சிலை மட்டும் அடியோடு உடைக்கப்பட்டு சேதமடைந்திருந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அங்கு இருந்த அண்ணா, எம்.ஜி.ஆர்., பெரியார் சிலையை உடனடியாக துணிகளை கொண்டு மூடி மறைத்தனர். தொடர்ந்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. மர்ம நபர்கள் யாரேனும் சிலையை சேதப்படுத்தினார்களா? அல்லது வாகனம் மோதியதில் சிலை சேதம் அடைந்ததா? என அங்கு இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தியது. அதில் முதற்கட்ட விசாரணையில், அவ்வழியாகச் சென்ற மினிடோர் ஆட்டோ மோதியதில் பெரியார் சிலை சேதமடைந்திருப்பது எனத் தெரியவந்தது.

இருப்பினும், சிலை சேதம் ஆனதற்கு உறுதியான தகவலோ முழு விவரமோ தெரியவில்லை. இதையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பாக நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு அசம்பாவிதம் ஏற்படுவதைத் தவிர்க்கச் சிலை அமைந்துள்ள பகுதியில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக அடுத்தகட்ட விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ள நிலையில், சிலை அமைந்துள்ள பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பான சூழல் நிலவியது.

Related Stories: