×

காஜாமலை மெயின்ரோட்டில் பாதாள சாக்கடை மேன்ஹோல் திடீரென உள்வாங்கிதால் பள்ளம்-கடும் துர்நாற்றத்தால் பொதுமக்கள் அச்சம்

திருச்சி : காஜாமலை மெயின்ரோட்டில் பாதாள சாக்கடையின் மேன்ஹோல் திடீரென உள்வாங்கி மெகா பள்ளம் ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் வழிந்தோடியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடைக்காக குழாய் பதிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், புதிய குடிநீர் பைப் உள்ளிட்ட இதர பணிகளும் நடந்து வருகிறது. இந்த பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்ட மேயர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் தினமும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.

ஒருசில பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்த தற்காலிக சாலைகள் போடப்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் முழுமையாக முடிந்த பின்னர் அனைத்து பகுதிகளுக்கும் புதிய தார் சாலைகள் போட முடிவு செய்யப்பட்டு அதற்குரிய பணிகளும் துவங்கி நடக்கிறது.

இந்நிலையில் திருச்சி கே.கே.நகர் ரேஸ்கோர்ஸ் சாலை பகுதிகளில் அண்ணா விளையாட்டரங்கம், டிஐஜி அலுவலகம், சட்டக்கல்லூரி, பாரதிதாசன் பல்கலை மற்றும் லஞ்ச ஒழிப்பு அலுவலகம், ஈவிஆர் அரசு கலைக்கல்லூரி உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் கோயில்கள் உள்ளது. அதுபோல் காஜாமலை சாலையில் கலெக்டர் பங்களா, நீதிபதிகள் குடியிருப்புகள் உள்ளிட்ட அரசு குடியிருப்புகள் உள்ளது.

இதில் காஜாமலை மெயின்ரோடு பஸ் நிறுத்தம் அருகே நேற்று பாதாள சாக்கடையின் மேன்ஹோல் திடீரென உள்வாங்கியதால் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டது.
மேலும், மேன்ஹோல் வழியே கழிவுநீர் வெளியேறியதால் சாலை முழுவதும் கழிவுநீர் நிரம்பி துர்நாற்றம் வீசியது. இதனை தொடர்ந்து திடீரென பள்ளத்தை சுற்றிலும் தடுப்பு அமைத்த பொதுமக்கள் இதுகுறித்து மாநகராட்சிக்கு தகவல் அளித்தனர்.பாதாள சாக்கடை மேன்ஹோல் திடீரென உள்வாங்கி தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். மேலும் கடும் துர்நாற்றும் வீசியதால் குடியிருப்புவாசிகளும் அச்சமடைந்தனர்.

Tags : Kajamalai , Trichy: The manhole of the underground sewer on the Kajamalai main road suddenly caved in and created a mega sinkhole on the road.
× RELATED திருச்சியில் 2 கோயில்களின் பூட்டை உடைத்து நகை திருட்டு