திருபுவனை சுற்றுப்புற பகுதிகளில் ஏரிகளை தூர்வாரி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும்-அரசுக்கு விவசாய சங்கங்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

திருபுவனை : திருபுவனை,  திருவாண்டார்கோவில், நல்லூர், மதகடிப்பட்டு  பகுதிகளில் உள்ள ஏரியை தூர்வாரி ஆழப்படுத்தி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய சங்கங்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருபுவனை ஏரிக்கரை 6 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியானது, இப்பகுதிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. ஏரியின் கரையோரங்களை சுற்றி பனை மரங்கள் ரம்மியமாக காட்சியளிக்கின்றன. இந்த ஏரிக்கு வரக்கூடிய நீர்வழி வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் புல், புதர்கள் மண்டி கிடக்கிறது. பல்வேறு இடங்களில் வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வழித்தடங்கள் அடைக்கப்பட்டுள்ளன.  

பக்கத்தில் உள்ள நல்லூர் மதகடிப்பட்டு ஏரியிலிருந்து தண்ணீர் வருவது வழக்கம். ஏரிக்கு வரும் பாசன வாய்க்கால்கள் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதால் ஏரிக்கு தண்ணீர் வராமல் வறண்டு போயுள்ளது. எனவே, வருகிற மழைக்காலங்களுக்கு முன்  போர்க்கால அடிப்படையில் புதுவையில் உள்ள ஏரி, குளங்களை கண்டறிந்து நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையிலும், நிலத்தடி நீர்மட்டம் உயரும் வகையிலும் ஏரியை ஆழப்படுத்த  நடவடிக்கை எடுக்க வேண்டும். திருபுவனை  ஏரிக்கரையை ஆழப்படுத்தி, அதன் கரைப்பகுதிகளை பலப்படுத்த வேண்டும். அதேபோல் நீர்நிலை பகுதிகளில்  குடிமகன்கள் குடித்துவிட்டு பாட்டில்களை நீர்நிலைகள் மீது வீசுவதும், உடைத்து எறிவதும் வேதனையாக உள்ளது.

புதுவை அரசு நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் நீர்நிலை பகுதிகளில் தடுப்புகள்  அமைத்து, சமூக விரோதிகள் உள்ளே சென்று நாசவேலையில் ஈடுபடாமல் தடுக்கவும் தனி சட்டம் இயற்ற வேண்டும். வருங்கால சந்ததியினருக்கு நீரின் முக்கியத்துவம் பற்றியும், நீர்நிலைகளை பாதுகாத்திடவும் நல்லொழுக்க நெறிமுறைகளை அரசு வகுக்க வேண்டும். எனவே, புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி  ஒவ்வொரு ஏரியின் பரப்பளவு எவ்வளவு உள்ளது என்பதனை கூகுள் உதவியுடன் துல்லியமாக கணக்கிட்டு, ஆக்கிரமிப்பு பகுதிகள் ஏதேனும் இருந்தால் அதை முறையாக கணக்கிட்டு ஆக்கிரமிப்பாளருக்கு நோட்டீஸ் கொடுத்து, அப்பகுதியினை அரசின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்   என்று அப்பகுதி விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: