×

டாலர் சிட்டியை திணறடிக்கும் போக்குவரத்து நெரிசல்-மேம்பாலங்கள் அமைத்தால் கட்டுப்படுத்தலாம்

திருப்பூர் : டாலர் சிட்டியான திருப்பூரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கூடுதல் மேம்பாலங்களை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பனியன் நிறுவனம் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள், விவசாயம், கைத்தறி உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் நடைபெற்று வருகிறது.  பல்வேறு தொழில்கள் நடைபெற்று வரும் தொழில் நகரமான திருப்பூருக்கு டாலர்சிட்டி, குட்டி ஜப்பான், ஜவுளி நகரம் என பல்வேறு பெயர்கள் உண்டு.  மேலும், வந்தாரை வாழ வைக்கும் பூமி என்ற பெயரே மிகப்பொருத்தமாக அமையும். ஏனென்றால், எத்தனை லட்சம் தொழிலாளர்கள் வந்தாலும் அனைவருக்கும் வேலை வாய்ப்பை வழங்கக்கூடிய சக்தி திருப்பூர் தொழில்துறைக்கு உள்ளது.

15 ஆண்டுக்கு முன்பு வரை தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களை சேர்ந்தவர்களும், கேரள மாநிலத்தை சேர்ந்த சிலர் மட்டுமே திருப்பூரில் தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர். நாளடைவில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தொழிலாளர்கள் திருப்பூருக்கு வேலை தேடி படையெடுக்க தொடங்கினர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பீகார், ஒடிசா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட வடமாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் திருப்பூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் தங்கி பணி புரிந்து வருகின்றனர். பின்னலாடை தொழில் மட்டுமின்றி அதை சார்ந்துள்ள அனைத்து தொழில்கள் மற்றும் ஹோட்டல்கள், கட்டிட வேலை, பெட்ரோல் நிலையங்கள், துணிக்கடைகள், அலகு நிலையங்கள் உள்பட அனைத்து துறைகளிலும் வடமாநில தொழிலாளர்களின் பணியாற்றி வருகின்றார்கள்.

இந்நிலையில், திருப்பூர் மாநகரில் தொழிலாளர்களின் வருகைக்கேற்ப வாகன பெருக்கம் அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தப்படியாக தமிழகத்தில் அதிகப்படியான வாகனங்கள் ஓடும் இடமாக திருப்பூர் உள்ளது. வாகன பெருக்கம் அதிகரித்துள்ளதற்கேற்ப உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படாமல் உள்ளது. திருப்பூரில் அவிநாசி ரோடு, தாராபுரம் ரோடு, காங்கயம் ரோடு, ஊத்துக்குளி ரோடு, மங்கலம் ரோடு, உள்ளிட்ட 8 முக்கிய ரோடுகள் உள்ளன. இந்த 8 ரோடுகளும் மிகக்குறுகியவையாக உள்ளது. இதனால் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெருக்கடிக்கு திருப்பூர் உள்ளாகிறது.

போக்குவரத்து நெரிசலை தீர்க்க பழைய பஸ் நிலையத்தில் ஒரு மேம்பாலம் அமைக்கப்பட்டது. அந்த மேம்பாலத்தில் பழைய பஸ் நிலையத்தை தாண்டி செல்லும் வாகனங்கள் மேம்பாலம் வழியாக செல்லும். அதேபோல், புஸ்பா மேம்பாலம் வழியாக பி.என்.ரோடு, அவிநாசி ரோடு வழியாக செல்லும் வாகனங்கள் சென்று வருகிறது. இந்நிலையில், போக்குவரத்து நெரிசலை குறைக்க காலேஜ் ரோடு, அணைப்பாளையம் பகுதியிலும், தெற்கு வடக்கு பகுதிகளை இணைக்கும் வகையில் ஊத்துக்குளி ரோடு, பாளையக்காட்டிலும் புதிய மேம்பாலங்கள் கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது. இந்த இரண்டு புதிய மேம்பாலங்களை திறந்தால் திருப்பூரில் போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறையும்.

மேலும், புஸ்பா சந்திப்பு முதல் பி.என்.ரோடு பாண்டியன் நகர் வரை பல கோடி மதிப்பில் பறக்கும் மேம்பாலம் அமைக்க மண் பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், இன்னும் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. இந்த பாலப்பணிகள் முடிந்து பறக்கும் மேம்பாலம், அனைப்பாளையம் மேம்பாலம், பாளையக்காடு மேம்பாலம் ஆகியவற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் திருப்பூர் மாநகரில் பெரும் போக்குவரத்து நெருக்கடி குறையும்.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
தமிழகத்தில் பெருநகரங்களாக விளங்கும் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட நகரங்களில் சாலை உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் தொடக்கத்தில் இருந்தே மிகவும் நன்றாக உள்ளது. மேலும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பல மேம்பாலங்கள் புதியதாக கட்டப்பட்டுள்ளது. ஆனால் தொழில் நகரமான திருப்பூர் மாவட்டமாகவும், மாநகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டு பெரிய அளவிலான உட்கட்டமைப்பு வசதிகள் செய்யவில்லை.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை, குடிநீர், சாலை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும். போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் புதிய மேம்பாலத்திற்கான எந்த அறிவிப்பும் இல்லை. எனவே திருப்பூர் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நீண்ட நாள் கோரிக்கையான போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் மேம்பாலம் கட்டுவதுடன் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.  போக்குவரத்து நெரிசல் குறித்து கொங்கு நகர் சரக போக்குவரத்து இன்ஸ்பெக்டர்  தனசேகரன் கூறியதாவது:
தொழில் நகரமான திருப்பூரில் வாரத்தின் 7 நாட்களும் வேலைநாட்கள் தான். ஞாயிற்றுக்கிழமை பகல் 11 மணிக்கு மேல் கூடுதல் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் டவுன் பகுதிக்கு வருகிறார்கள். திருப்பூர் மாநகரில் மட்டும் நாளொன்று 30 ஆயிரம் இரு சக்கர வாகனமும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சரக்கு வாகனம், கார்களும், 1000க்கும் மேற்பட்ட லாரிகளும் மாநகரில் தினசரி ஏதாவது ஒரு பகுதியில் சுற்றி வருகிறது.

மேலும், விஷேச நாட்களில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகும். அதேபோல், பாதசாரிகளுக்கு அமைக்கப்பட்ட நடைமேம்பால ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். புஸ்பா, டவுன் ஹால் பகுதிகளில் இரும்பு நடை மேம்பாலம் அமைத்ததால் ரோடுகள் குறுகியது. எனவே, பொதுமக்கள் ரோட்டை கடந்து செல்லாமல் கட்டாயம் இரும்பினால் ஆன நடை மேம்பாலத்தை பயன்படுத்த வேண்டும்.

படி ஏற முடியாத பொதுமக்கள், முதியோர்களுக்கு சிக்னலில் உள்ள போக்குவரத்து போலீசார் உதவி செய்வார்கள். மேலும், தெற்கு, வடக்கு பகுதியை இணைப்பது பார்க் ரோடு தான். இந்த ரோட்டில் ஏதேனும் ஒரு வாகனம் பழுதாகி நின்றால் ஒட்டுமொத்த போக்குவரத்தும் ஸ்தம்பித்துவிடும். இதற்கு மாற்றாக வேறு ஒரு ரோட்டை ஏற்பாடு செய்ய வேண்டும்.
பஸ்கள் புதிய பஸ் நிலையத்திலிருந்து, யுனிவர்சல் தற்காலிக பஸ் நிலையம் வந்து எம்.ஜி.ஆர் சிலை வழியாக மீண்டும் சேலம், காங்கயம், போன்ற பகுதிகளுக்கு செல்வதால் கூடுதல் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு எடுத்து கூறினாலும் அவர்கள் திட்டம் வகுப்பதில்லை.

போக்குவரத்து சம்மந்தமான எந்த வேலைகளாக இருந்தாலும் ஒருங்கிணைந்து செய்ய வேண்டும். மேலும், கொங்கு மெயின் ரோடு, பி.என்.ரோடு, அவிநாசி ரோடு, வேலம்பாளையம் ரிங் ரோடு ஆகியவைகளை இணைக்கும் ரோடு இல்லை. இதனால், கொங்கு மெயின் ரோட்டிலிருந்து, வேலம்பாளையம் ரிங் ரோடு செல்பவர்கள் மற்ற இரண்டு ரோடுகளை கடந்து தான் செல்ல வேண்டும். இதனால், இரண்டு ரோடுகளிலும் நெரிசலை தவிர்க்கும் வகையில் இரு சக்கர வாகனம் செல்லும் அளவிற்காவது சுரங்க பாலம் அமைக்க வேண்டும்.

திருப்பூர் மாநகரில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிபுணர் குழு அமைக்க வேண்டும். அதேபோல், வளம் பாலம் வழியாக மணியகாரம்பாளையம் பாலம் செல்லும் ரோடு சரிசெய்யப்பட்டால் ராக்கியாபாளையம் வழியாக காங்கயம் ரோடு செல்லும் கனரக வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் செல்லும். இதனால் ஒரு பகுதி போக்குவரத்து நெரிசல் குறையும்.
அதே போல், ரயில்வே கூட்செட்டில் சரக்கு ஏற்றும் லாரிகள் வளம் பாலம் அருகில் உள்ள வே-பிரிட்ஜ்ஜில் எடை போட்டு விட்டு மீண்டும் திரும்பவும் நகர பகுதிக்குள் வந்து தான் பிரிந்து செல்கிறது. இதற்கு மாற்றாக ரயில்வே கூட் செட்டிலேயே வே-ப்ரிட்ஜ் அமைத்தால் சரக்கு ஏற்றி விட்டு லாரிகள் அங்கேயே எடை போட்டு செல்லும் இடத்திற்கு செல்லலாம்.

பார்சல் லாரிகள் மாநகரப்பகுதிக்கு வெளியே நிறுத்தி சிறிய வாகனங்களில் ஏற்றி வந்து இறக்கலாம். மேலும், திருப்பூர் மாநகருக்குள் கனரக வாகனங்கள் வரும் நேரத்தை மற்றி இரவு நேரத்தில் மட்டும் மாநகருக்குள் வரும்படி செய்ய வேண்டும். வருங்காலத்தில் புஸ்பா தியேட்டரிலிருந்து வஞ்சிபாளையம் வரை பறக்கும் பாலம் அமைத்தால் திருப்பூரிலிருந்து அவிநாசி, கோவை செல்லும் வாகனங்கள் எந்த ஒரு நெரிசலும் இல்லாமல் செல்லும். இதனால், போக்குவரத்து நெரிசல் குறையும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Dollar City , Tirupur: Motorists have demanded that additional flyovers be constructed to avoid traffic jams in the dollar city of Tirupur.
× RELATED வேலையில்லா திண்டாட்டத்தால் வட மாநில தொழிலாளர்கள் வருகை அதிகரிப்பு