×

வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 1,062 குவிண்டால் பருத்தி ரூ.1 கோடிக்கு ஏலம்-மறைமுக ஏலத்தில் விவசாயிகள் மகிழ்ச்சி

வலங்கைமான் : வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நடைபெற்ற மறைமுக ஏலத்தில் 1,062 குவிண்டால் பருத்தி ரூ.1 கோடியே 5 லட்ச ரூபாய்க்கு ஏலம் போனது. இதனால் பருத்தி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.நெல் சாகுபடி அறுவடைக்கு பிறகு, கோடை சாகுபடி ஆக வலங்கைமான் மற்றும் ஆதிச்ச மங்கலம் , சந்திரசேகரபுரம், கோவிந்தகுடி, மருவத்தூர் மேல விடையல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சித்தன் வாழூர், வேலூர், மாத்தூர் , விளத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் முறையே சுமார் 250 ஏக்கர் வீதம் பருத்தி சாகுபடி செய்யப் பட்டடுள்ளது.

ஆண்டுதோறும் சுமார் 1000 ஏக்கரில் கடந்த ஆண்டு வரை பருத்தி சாகுபடி செய்து வந்த நிலையில், இந்தாண்டு கூடுதலாக சுமார் 4 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு பருத்திக்கு கூடுதல் விலை கிடைத்தது. ஆட்கள் பற்றாக்குறையை சமாளிக்க இயந்திரத்தின் உதவியுடன் மண் அணைத்தல், மண் கிளறுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதால் பருத்தி சாகுபடி இந்த ஆண்டு கூடுதலாக உள்ளது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில், வலங்கைமான், நீடாமங்கலம் சாலையில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறுவது வழக்கம்.நேற்று முன்தினம் வேளாண்மை துறை விற்பனை மற்றும் வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் ஒழுங்குமுறை விற்பனை கூட செயலாளர் சரசு உத்தரவின் பேரில், ஒழுங்குமுறை விற்பனை கூட மேலாளர் வீராச்சாமி முன்னிலையில் நடைபெற்றது .100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பஞ்சினை விற்பனைக்காக ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்தனர்.

பருத்தி அதிகபட்ச விலையாக குவி்ண்டால் 10,109 ரூபாய்க்கும், குறைந்த பட்ச விலையாக குவிண்டால் 9,549 ரூபாய்க்கும் சராசரி விலையாக குவிண்டால் 9,866 ரூபாய்க்கு ஏலம் போனது . பருத்தி ஏலத்தில் ஆயிரத்து 62 குவிண்டால் பருத்தி ஒரு கோடியே 5 லட்சத்து 6 ஆயிரத்து 928 ரூபாய்க்கு ஏலம் போனது.ஏலத்தில் 8 வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதனால் பருத்தி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பருத்தி மறைமுக ஏலத்தில் கலந்து கொள்வதற்காக பருத்தி விவசாயிகள் பஞ்சினை வியாழக்கிழமை அதிகாலை முதலை வாகனங்களில் கொண்டு வந்து கும்பகோணம் மன்னார்குடி சாலையில் பல மணி நேரம் காத்திருந்தனர் .வருகின்ற வெள்ளிக்கிழமை பருத்தி ஏலம் வழக்கம்போல் நடைபெறும் என்றும் பருத்தி ஏலத்தில் பருத்தி விவசாயிகள் இடைத்தரகர்கள் இன்றி சரியான எடையில் நல்ல விலையில் , விற்பனை செய்து பயன்பெற ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேலாளர் வீராச்சாமி அழைப்பு விடுத்துள்ளார்.

Tags : Valangaiman ,Regulation Hall , Valangaiman: 1,062 quintals of cotton in indirect auction held at Valangaiman Regulation Hall.
× RELATED கலவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்...