×

குறுவை சாகுபடிக்கான நெல் பயிரில் முட்டை ஒட்டுண்ணியை வைத்து தண்டு துளைப்பானை கட்டுப்படுத்தலாம்-வேளாண்மை அறிவியல் நிலையம் தகவல்

நீடாமங்கலம் : குறுவை சாகுபடிக்கான நெல் பயிரில் முட்டை ஒட்டுண்ணியை வைத்து தண்டு துளைப்பானை கட்டுப்படுத்தலாம் என்று நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,விவசாயிகள் தற்போது நெல் பயிருக்கான குறுவை சாகுபடி செய்துள்ளனர். இந்தத் தருணத்தில் இலை சுருட்டு புழு மற்றும் தண்டு துளைப்பான் தாக்குதல் ஆங்காகே தென்படுகிறது. இவற்றைக் கட்டுப்படுத்த, பல்வேறு மேலாண்மை முறைகளை கடைபிடித்து வருகின்றனர். விட்டு, விட்டு பெய்யும் மழையால், விவசாயிகள் மேற்கொள்ளும் மேலாண்மை முறைகளான பூச்சிக்கொல்லி முறை சற்று பலன் குறைவாக உள்ளது.

ஏனென்றால், பூச்சிக்கொல்லிகள் தெளித்தவுடன் ஓரிரு மணித்துளிகளில் மழை வருவதால் அவற்றின் கட்டுப்பாடு மிகவும் குறைவாக இருக்கிறது. இந்த பூச்சிகளுக்கு நன்மை செய்யும் பூச்சிகளில் ஒன்றான ஒட்டுண்ணிக் குளவிகளை வைத்து இலை சுருட்டு புழு மற்றும் தண்டு துளைப்பானை கட்டுப்படுத்தலாம்.தண்டு துளைப்பானை கட்டுப்படுத்த டிரைக்கோகிரம்மா ஜப்பானிக்கம் என்ற முட்டை ஒட்டுண்ணியை நடவு நட்ட 37 வது நாள் முதல் ஒரு வார இடைவெளியில் மூன்று முறை வயலில் ஒரு ஹெக்டருக்கு ஒரு லட்சம் என்ற வீதத்தில் உபயோகப்படுத்த வேண்டும்.

அதேபோல இலை சுருட்டு புழுக்களை கட்டுப்படுத்த டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் என்ற முட்டை ஒட்டுண்ணியை நடவு நட்ட 30 வது நாட்கள் முதல் ஒரு வார இடைவெளியில் மூன்று முறை ஒரு ஹெக்டருக்கு ஒரு லட்சம் முட்டை ஒட்டுண்ணி என்ற வீதத்தில் உபயோகப்படுத்த வேண்டும். விவசாயிகள் தொடர்ந்து ஒரு வார கால இடைவெளியில் இதனை பயன்படுத்தும் பட்சத்தில் இலை சுருட்டு புழு மற்றும் தண்டு துளைப்பானின் தாக்குதலை வெகுவாக குறைக்க முடியும்.

ஏனென்றால் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கும் போது, விவசாயிகள் பூச்சிக்கொல்லிகளை உபயோகிக்க முடியாத நிலை நிலவுவதால், இந்த முட்டை ஒட்டுண்ணிகள் உபயோகத்தை அதிகப்படுத்த வேண்டும். மேலும் இந்த முட்டை ஒட்டுண்ணி பயன்படுத்துவதனால், சுற்றுப்புற சூழ்நிலைக்கு எந்தவித கேடும் ஏற்படாது.எனவே விவசாயிகள் முட்டை ஒட்டுண்ணிகளை பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Tags : Agricultural Science Center , Needamangalam: Needamangalam Agriculture said that stem borer can be controlled by keeping egg parasite in paddy crop for cultivation.
× RELATED தா.பழூர் சோழமாதேவி கிராமத்தில் கிரீடு...