×

தஞ்சை அருகே 65 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த கோவில் திருவிழா: 1000 கிடாக்களை வெட்டி கிராமமே கமகம அசைவ விருந்து

தஞ்சாவூர்: தஞ்சை அருகே 65 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த கோவில் திருவிழாவில் 1000 கிடாக்களை வெட்டி வீட்டுக்கு வீடு பந்தல் அமைத்து அசைவ விருந்து படைத்ததால் கிராமமே கமகமத்தது. தஞ்சை அருகே தெத்துவாசல்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீமகாகாளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் கிடாக்கள் வெட்டி திருவிழா வெகுசிறப்பாக நடைபெறுவது வழக்கம். 65 ஆண்டுகளுக்கு முன்பு இருதரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் கிடாவெட்டு திருவிழா தொடர்ந்து தடைப்பட்டது. இந்தாண்டு, விவசாயம் சிறப்பாக அமைந்திருப்பதால் ஊர் பெரியவர்கள் ஒன்றுகூடி பேசி அனைவரும் ஒன்றிணைந்து திருவிழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

திருவிழாவிற்கு வாருங்கள் என உற்றார், உறவினர், நண்பர்களை கிராமத்தினர் அழைப்பிதழ் கொடுத்து வரவேற்றனர். ஸ்ரீமகாகாளியம்மனுக்கு 65 ஆண்டுகளுக்கு பிறகு வீட்டிக்கு 3 கிடா, 5 கிடா என மொத்தம் 1000 கிடாக்கள் வெட்டி ஊரார் நேர்த்திக்கடனை செலுத்தினர். கறி குழம்பு, கறி வறுவல், மீன் வறுவல், முட்டையுடன் விருந்து படைத்து வெற்றிலை, தாம்பூலம் வழங்கி விருந்தாளிகளை தடபுடலாக உபசரித்தனர். தெத்துவாசல்பட்டி கிராமத்தில் நடந்த அசைவ விருந்தில் 500கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் தங்கள் கைவண்ணம் காட்டினர். இதனால், தெத்துவாசல்பட்டி  கிராமமே விழா கோலம் கொண்டிருந்தது. 


Tags : Temple festival ,Tanjore ,Kamagama , Tanjore, temple, festival, 1000 kida, cut, village, non-vegetarian
× RELATED தருவைக்குளம் புனித ஜெபமாலை ஆலய திருவிழாவில் அசன விருந்து