×

சீனாவில் தயாரான ரப்பர் படகு வேதாரண்யத்தில் கரை ஒதுங்கியது: காவல்துறை வாகன சோதனையில் போலந்து நாட்டவர் சிக்கினார்

நாகப்பட்டினம்: வேதாரண்யத்தில் கரை ஒதுங்கிய சீனாவில் தயாரான ரப்பர் படகில் வந்த போலந்து நாட்டவரை கடலோர காவல் குழும காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். வேதாரண்யத்தை  அடுத்து இருக்கும் உணாங்காடு பகுதியில் ரப்பர் படகு கரை ஒதுங்கிய தகவல் அறிந்து சென்ற கடலோர காவல் குழும போலீசார் படகை கைப்பற்றி அதில் வந்தவர் யார் என்று விசாரணை செய்தனர். 13 அடி நீளமும், 3 அடி அகலமும் கொண்ட அந்த படகு சீனாவில் தயாரானது. அதில் இலங்கை வாட்டர் பாட்டில்கள், துடுப்புகள், லைப் ஜாக்கெட், டிராவல் பேக், ஒரு ஜோடி காலணிகள் இருந்தன. இதனை தொடர்ந்து வாகன சோதனையை தீவிரப்படுத்திய போலீசார் தோப்புத்துறையில் சந்தேகத்திற்கு உள்ளகா நடந்து சென்ற வெளிநாட்டவரை பிடித்து விசாரித்ததில் போலந்தை சேர்ந்த வாத்திஸ் ஸ்வாப் என்பதும் அவரே படகில் வந்தவர் என்றும் உறுதியானது.

போலந்தில் இருந்து இலங்கைக்கு வந்து பிறகு அங்கிருந்து ரப்பர் படகு மூலமாக சனிக்கிழமை மாலை  உணாங்காட்டிற்கு வந்ததாகவும், காட்டு பகுதியில் பதுங்கி இருந்து இரவு ஊருக்குள் வந்து சென்னை செல்ல திட்டமிட்டிருந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அவருடைய பையில் இருந்த சில ஆவணங்களை கைப்பற்றிய காவல் துறையினர் படகில் அவர் மட்டும் தான் வந்தாரா அல்லது வேறு யாரேனும் உடன் வந்தார்களா என்று கியூ பிரான்ச் போலீசார் தீவிரவிசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள். படகில் உடன் வந்த வேற யாரேனும் வேதாரண்யம் பகுதியில் பதுங்கிருக்கிறார்களா என்பதை கண்டறிய விடிய விடிய வாகன சோதனை நடைபெற்று வருகிறது. கடற்கரை ஓரம் உள்ள மீனவ கிராமங்களில் காவல்துறை அறிவுறுத்தலின் பேரில் மீனவர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டு இருக்கிறார்கள். 


Tags : China , China, Rubber Boat, Vedaranya, Poland, Countryman, Trapped
× RELATED சீனாவில் பிரம்மாண்ட கார்...