கொடைக்கானலில் தூண்பாறையை மறைத்து மதில்சுவர் கட்டுவதற்கு இயற்கை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு

திண்டுக்கல்: கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தூண்பாறையை மறைத்து புதிதாக பிரம்மாண்ட மதில்சுவர் கட்டப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அங்கு வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் பல்வேறு சுற்றுலா இடங்கள் உள்ளன. இவற்றில் தூண்பாறை, அங்குள்ள பிரசித்தி பெற்ற மிகவும் அழகிய இடங்களில் ஒன்றாகும். இந்த தூண்பாறையை பல நேரங்களில் மேகமூட்டம் மறைத்து விடும். இதனால் பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் அங்கு வேலி அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த வேலியை அகற்றிவிட்டு வனத்துறையினர் பிரம்மாண்ட மதில்சுவரை எழுப்பி வருகின்றனர்.

இதற்கு இயற்கை ஆர்வலர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இயற்கைக்கு முரணாக தூண் பாறையை மறைத்து எழுப்பப்பட்டுள்ள பிரம்மாண்ட மதில் சுவரை உடனடியாக அகற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாக இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே மதில்சுவர் குறித்து தெரிவித்துள்ள இயற்கை அழகை பாதுகாக்கும் வகையில் தூண்பாறை அருகே, மதில்சுவரில் திறமையான ஓவியர்களை கொண்டு அழகிய வண்ண ஓவியங்கள் தீட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்கான பணிகள் முடிவடைந்ததும், அந்த மதில்சுவரை அனைவரும் பாராட்டுவார்கள் என்று வனத்துறை தெரிவித்துள்ளது.        

Related Stories: