×

நீலகிரி மாவட்டத்தில் மின்சார வசதி இல்லாத பழங்குடி கிராமங்கள்!: வாழ்க்கையில் வெளிச்சம் ஏற்படுத்த மின்வசதியை வழங்குமாறு அரசுக்கு கோரிக்கை..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின கிராமங்களில் அவல வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவர மின்சாரம் வழங்க வேண்டும் என்று பழங்குடியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் உள்ள செங்கல்கோம்பை, மல்லிகொறை, மேல்குரங்குமேடு, அணில்காடு உள்ளிட்ட 7 கிராமங்களுக்கும் சாலை வசதி இல்லாததால் கட்டுமான பொருட்களை கொண்டுசெல்ல முடியாமல் மண் வீடு கட்டி குறும்பர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மரக்குச்சிகளால் கட்டப்பட்ட வீடுகளை அடிக்கடி புதுப்பிக்க வேண்டியுள்ளது. மின்சாரம் என்றால் என்னவென்றே இதுவரை அறியாத 68 குடும்பங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு 2019ம் ஆண்டு சோலார் வசதி செய்து தரப்பட்டும் பயனில்லை என்று பழங்குடியினர் தெரிவித்தனர்.

மின்வசதி கோரி தொடரப்பட்ட வழக்கை ஏழு கிராமங்களும், அடர்வன பகுதியில் உள்ளதாக வனத்துறை மற்றும் மின்வாரியம் அளித்த அறிக்கையை ஏற்று உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதாக பழங்குடி மக்கள் செயற்பாட்டாளர் மணி தெரிவித்தார். மின்சாரம் இல்லாததால் காட்டெருமை போன்ற விலங்குகள் வருவதையும், பயிர்களை அவை நாசப்படுத்துவதையும் தடுக்க முடியவில்லை என்று கிராமத்தினர் தெரிவித்தனர். எனவே வாழ்க்கையில் வெளிச்சம் ஏற்படுத்த மின்வசதியை வழங்குமாறு அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Nilgiri district , Nilgiris, electricity facility, tribal villages
× RELATED சோலூர் செல்லும் சாலையில் சாய்ந்துள்ள பைன் மரங்களால் விபத்து அபாயம்