இ.சி.ஆர். சாலையில் 2 ஷேர் ஆட்டோக்களின் பின்புறம் கார் மோதிய விபத்தில் பெண் உட்பட 2 பேர் பலி

சென்னை: மாமல்லபுரம் இ.சி.ஆர். சாலையில், 2 ஷேர் ஆட்டோக்கள் பின்புறம், கார் பயங்கரமாக மோதிய விபத்தில் ஒரு பெண் உள்பட 2 பேர்  உயிரிழந்தனர். மாமல்லபுரம், அருகே தேவனேரி இசிஆர் சாலையில் கோவளத்தில் இருந்து மாமல்லபுரம் நோக்கி ஷேர் ஆட்டோ ஒன்று பயணிகளை ஏற்றி கொண்டு வந்து கொண்டிருந்தது. இதேப்போல், தேவனேரி பஸ் நிறுத்தம் அருகில் பயணிகளை ஏற்றி கொண்டு எதிர் திசையில் அடுத்தடுத்து  இரண்டு ஷேர் ஆட்டோக்கள் ஒன்றன் பின் ஒன்றாக மாமல்லபுரம் நோக்கி வந்தது.

அப்போது, புதுச்சேரி நோக்கி மின்னல் வேகத்தில் சென்ற ஒரு கார் இரண்டு ஷேர் ஆட்டோக்களின் பின்பக்கம் மீது பயங்கர சத்தத்துடன் மோதியது. இதில், இரண்டு ஷேர் ஆட்டோக்களும் தூக்கி வீசப்பட்டு நொறுங்கியது. இதில், ஒரு ஆட்டோவில் நேபாளத்தை சேர்ந்த யாம்லால் (52) என்பவர் பயணம் செய்தார். இவர், தேவனேரியில் உள்ள பண்ணை வீட்டின் காவலாளியாக இருந்தார். அதேபோல, தோட்டக்கலை தொழிலாளியான வாயலூர் கிராமத்தை, சேர்ந்த ராஜேந்திரனின் மனைவி உண்ணாமலை (54) ஆகிய இருவரும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

மேலும், இரண்டு ஆட்டோக்களில் பயணித்த 8 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்து, தகவலறிந்த மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், எஸ்ஐ விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: