×

ஒருபுறம் அனுமதி மறுபுறம் தாக்குதல்: கருங்கடல் ஒப்பந்தத்தை மீறும் ரஷ்யா: தானியம் ஏற்றுமதியில் மீண்டும் சிக்கல்: மகிழ்ச்சி அடைந்த நாடுகள் ஏமாற்றம்

1945ம் ஆண்டுக்கு பிறகு ஐரோப்பாவில் நடக்கும் மிகப்பெரிய போர், உக்ரைன்-ரஷ்யா போர். உணவு தானியங்கள், கச்சா எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ஏற்றுமதியில் முன்னணி வகிக்கும் இருநாடுகளுக்கு இடையேயான போரால் உலகமே ஆட்டம் கண்டுள்ளது. வரலாறு காணாத உணவு நெருக்கடி, பொருளாதார சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு, விலைவாசி உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வல்லரசு நாடுகள் முதல் ஏழை நாடுகள் வரை ஸ்தம்பித்து நிற்கின்றன. இந்த சூழலில், போரால் முடங்கிய கருங்கடல் பகுதியில் உள்ள துறைமுகங்களில் மீண்டும் ஏற்றுமதி செய்ய ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகள் துருக்கி மற்றும் ஐ.நாவுடன் தனித்தனியே ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதனால், உலகம் முழுவதும் உள்ள உணவு நெருக்கடி, விலைவாசி உயர்வுக்கு தீர்வு கிடைக்குமா? என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

நேட்டோ அமைப்பில் இணைய எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது கடந்த பிப்.24ம் தேதி ரஷ்யா அதிரடியாக போர் தொடுத்தது. நேட்டோவில் இணைய உக்ரைனுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. நேட்டோவில் உக்ரைன் இணைந்தால், உக்ரைனுக்குள் நுழைந்து ரஷ்யாவுக்கு குடைச்சல் கொடுக்க அமெரிக்கா திட்டமிட்டது. இதையறிந்த ரஷ்யா, நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக, உக்ரைன் நேட்டோவில் இணைய எதிர்ப்பு தெரிவித்தது. இந்த விவகாரத்தில் சுமூக முடிவு எட்டப்படாததால், போர் தீவிரமானது.

*தனிமையான ரஷ்யா
உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்க, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஒன்றாக ஆதரவு தந்து, ஆயுதங்கள் மற்றும் நிதியுதவி அளித்தன. ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன. இதனால், கடும் பொருளாதார இழப்பை ரஷ்யா சந்தித்தது. ரஷ்யாவும், தன்னுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு ரூபிளில்தான் வர்த்தகம் செய்ய வேண்டும் என்று அதிரடி நிபந்தனைகளை விதித்தது. ரஷ்யாவின் கச்சா எண்ணெயை வாங்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மறுத்தன. இதனால், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு குறைந்த விலையில் கச்சா எண்ணெயை ரஷ்யா விற்பனை செய்து வருகிறது. இருதரப்பிலும் ஏட்டிக்கு போட்டியாக பொருளாதார தடைகள், அதிரடி நிபந்தனைகள் விதித்ததால், உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. பொருளாதார தடைகளால் சர்வதேச நிதி நாணய அமைப்பில் இருந்து ரஷ்யா தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் ஏற்பட்ட நெருக்கடியால், கடந்த நூற்றாண்டில் இல்லாத வகையில் ரஷ்யா தனது வெளிநாட்டு கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வருகிறது.

*போரால் வர்த்தகம் பாதிப்பு
ஒரு கட்டத்தில் அதிதீவிர போராக மாற்றிய ரஷ்யா, உலக நாடுகளுக்கு முக்கிய வர்த்தக மையமான உக்ரைனின் துறைமுக நகரம், வர்த்தக மற்றும் தொழில் நகரத்தை அடுத்தடுத்து கைப்பற்றியது. மரியுபோல், ஒடேசா கருங்கடல் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை தன்வசப்படுத்தி, துறைமுகங்கள் வழியாக நடக்கும் வர்த்தகத்தை முற்றிலுமாக நிறுத்தியது. அதை மீறி சில ஏற்றுமதி நடந்தது. இதனால் ஆத்திரமடைந்த ரஷ்ய ராணுவம், கடலில் கண்ணி வெடிகளை போட்டுள்ளது. இதனால், கப்பல் போக்குவரத்து நடக்க முடியாத நிலை உருவாகி இருக்கிறது. அதையும் மீறி போக்குவரத்து செய்தால், கண்ணி வெடியில் சிக்கி கப்பல்கள் சிதறும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக அனைத்து ஏற்றுமதியும் முற்றிலுமாக நின்றது. ரயில்கள், சாலைகள் மற்றும் நதி மூலம் சில தானியங்கள் ஐரோப்பாவுக்கு கொண்டு செல்லப்பட்டது. இருந்தாலும், தேவையை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை.

*விலைவாசி கடும் உயர்வு
கருங்கடல் துறைமுகங்களில் கப்பல் வழியாக வர்த்தகம் நிறுத்தப்பட்டதால், தங்கம், கச்சா எண்ணெய், சமையல் எண்ணெய் பொருட்கள், உணவு தானியங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது. இதனால், அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட உலக முழுவதும் பல்வேறு நாடுகள் விலைவாசி உயர்வு விண்ணை முட்டும் அளவுக்கு எகிறியது. உதாரணத்துக்கு கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், கடந்த ஆறு மாதங்களில் உணவுப் பொருட்களின் விலை சூடானில் 187%, சிரியாவில் 86%, ஏமனில் 60%, எத்தியோப்பியாவில் 54% உயர்ந்துள்ளது. வல்லரசு நாடுகள் முதல் பல்வேறு நாடுகளில் பணவீக்கம் வரலாறு காணாத வகையில் அதிகரித்து, பொருளாதாரம் தள்ளாட்டம் கண்டுள்ளது.

*இருநாடு பேச்சுவார்த்தை
கருங்கடல் வழியாக ஏற்றுமதி நிறுத்தப்பட்டதால் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது துருக்கி. இதனால், ரஷ்யா, உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கருங்கடல் வழியே ஏற்றுமதி வர்த்தகம் நடக்க ஒப்பந்தம் செய்ய துருக்கி மிகவும் ஆர்வம் காட்டியது. இதேபோல், கருங்கடல் பகுதியை திறந்து விட இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்த ஐ.நா முயற்சி மேற்கொண்டன. இதையடுத்து போருக்கிடையே, இதுதொடர்பான பேச்சுவார்த்தை கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. கடந்த வாரம் துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் துருக்கி, ஐ.நா அதிகாரிகள் முன்னிலையில் உக்ரைன் - ரஷ்ய ராணுவ அதிகாரிகள் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, உணவு ஏற்றுமதி தடையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தின் முதற்கட்ட வரைவு கொண்டு வரப்பட்டது. அதில், உக்ரைனில் உள்ள ஒடேசா, பிவ்டென்னி மற்றும் சோர்னோமோர்ஸ்க் ஆகிய 3 துறைமுகங்கள் மூலம் ஏற்றுமதி நடைபெறவும், எதிர்காலத்தில் இதனை பல துறைமுகங்களுக்கு விரிவுப்படுத்தவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. ரஷ்யாவின் அச்சுறுத்தல் தொடரும் என்று சந்தேகிக்கப்படுவதால், இந்த ஏற்றுமதி ஐ.நா கண்காணிப்பு குழுவின் மேற்பார்வையில் நடத்த முடிவு எடுக்கப்பட்டது.

*ஒப்பந்தம் கையெழுத்து
அதன்படி, இஸ்தான்புல்லில் நேற்று நடந்த சந்திப்பில், துருக்கி அதிபர் எர்டோகன், ஐ.நா பொதுச்செயலாளர் கட்டரெஸ் முன்னிலையில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு, உக்ரேனிய உள்கட்டமைப்பு அமைச்சர் ஓலெக்சாண்டர் குப்ராகோவ் ஆகியோர் தனித்தனி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். ரஷ்யா-உக்ரைன் நேரடியாக ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. ரஷ்யாவின் அச்சுறுத்தல்கள் இருக்கும் என்று அச்சப்படுவதால், இருதரப்புக்கு பொதுவான ஒரு ஒப்பந்தத்தில் துருக்கி மற்றும் ஐ.நாவுடன் இருநாடுகளும் கையெழுத்திட்டுள்ளது. ‘தொகுப்பு ஒப்பந்தம்’ என அழைக்கப்படும் இந்த ஒப்பந்தம், மேற்கத்திய நாடுகளால் விதிக்கப்பட்ட தடைகளை மீறி ரஷ்யாவின் தானியங்கள், உரங்களின் ஏற்றுமதியை எளிதாக்கும். அதோடு, கருங்கடலில் மூடப்பட்ட உக்ரைன் துறைமுகங்கள் மீண்டும் திறக்கப்பட்டு, இந்த நாட்டின் உணவு தானியங்கள் உள்ளிட்ட விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு வழி வகுக்கும். இந்த நாடுகளில் இருந்து 5 மாதங்களுக்கு பிறகு ஏற்றுமதி நடைபெற உள்ளதால் உலகளவில் உணவு பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடுகள் நீங்கி விலைவாசி குறையும் என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தங்களின் உணவு தானியம், சமையல் எண்ணெய் பற்றாக்குறைக்கு இந்த ஒப்பந்தத்தால் தீர்வு ஏற்படும் என பல உலக நாடுகள் மகிழ்ச்சி அடைந்தன. ஆனால், இந்த மகிழ்ச்சி சில மணி நேரங்கள் கூட நீடிக்கவில்லை.  

*திடீர் தாக்குதல்
கருங்கடலில் ஏற்றுமதி வர்த்தகம் நடைபெறும் பகுதிகளில் இருதரப்பினரும் தாக்குதல் நடத்தக்கூடாது என்று ஒப்பந்தத்தில் இருநாட்டு பிரதிநிதிகளும் கையெழுத்திட்டுள்ளனர். ஆனால், ஒப்பந்தம் கையெழுத்தான சில மணி நேரங்களில் உக்ரைனின் முக்கியன துறைமுகமான ஒடேசா  மீது ரஷ்ய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. பதிலடியாக உக்ரைனும் தாக்குதல் நடத்தி உள்ளது. இருநாடுகளும் ஒப்பந்தத்தை மீறி சண்டை போடுவதால், கருங்கடலில் ஏற்றுமதி வர்த்தகம் தடையின்றி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், எதிர்பார்ப்புடன் இருந்த உலக நாடுகள் ஏமாற்றம் அடைந்துள்ளன. இந்த தாக்குதல் மூலம், மேலும் பல உலக நாடுகள் ஆதரவை ரஷ்யா இழக்கும் என்று தெரிகிறது.



Tags : Russia , On one side sanction on the other side attack: Russia violates Black Sea Treaty: grain export problem again: happy countries disappointed
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...