×

நன்னடத்தை பிணையை மீறிய ரவுடிக்கு 294 நாட்கள் சிறை: மயிலாப்பூர் துணை கமிஷனர் உத்தரவு

சென்னை: நன்னடத்தை பிணையை மீறிய ரவுடிக்கு 294 நாட்கள் சிறை தண்டனை விதித்து மயிலாப்பூர் துணை கமிஷனர் திஷா மிட்டல் உத்தரவிட்டுள்ளார்.சென்னை திருவல்லிக்கேணி அயோத்தியா நகரை சேர்ந்தவர் கீதன் (25). ரவுடியான இவர் மீது, 2 கொலை முயற்சி உள்பட 7 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், மெரினா காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளி ஆவார். கடந்த 6.5.2022 அன்று கீதன், மயிலாப்பூர் துணை கமிஷனர் திஷா மிட்டல் முன்பு ஆஜராகி, தான் திருந்தி வாழப்போவதாக கூறி ஒரு வருட காலத்திற்கு எந்தவொரு குற்றச்செயலிலும் ஈடுபடமாட்டேன் என நன்னடத்தை உறுதிமொழி பிணைப்பத்திரம் எழுதி கொடுத்தார்.

ஆனால் ரவுடி கீதன், கடந்த 15ம் தேதி மெரினா பகுதியில் ஐஸ்கிரீம் வியாபாரியிடம் கத்தியை காட்டி வழிப்பறி செய்த வழக்கில் மெரினா போலீசார் கீதனை கைது செய்தனர். பிறகு நன்னடத்தை பிணைப்பத்திரத்தை மீறிய குற்றத்திற்காக மயிலாப்பூர் துணை கமிஷனர் திஷா மிட்டல் முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். அதைதொடர்ந்து செயல்முறை நடுவராகிய மயிலாப்பூர் துணை கமிஷனர், ரவுடி கீதனுக்கு நன்னடத்தை பிணைப்பத்திரம் எழுதி கொடுத்த நாட்களை கழித்து மீதமுள்ள 294 நாட்கள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டார். அதன்படி போலீசார் கீதனை ைகது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : Mylapore ,Deputy Commissioner , 294 days jail for rowdy who violated probation: Mylapore Deputy Commissioner orders
× RELATED சென்னை மயிலாப்பூரில் இருசக்கர...