×

பருவமழை காலம் தொடங்க இருப்பதால் சென்னையில் வெள்ள தடுப்பு பணிகள் தீவிரம்: அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

சென்னை: பருவமழை தொடங்க இருப்பதால், சென்னையில் நிரந்தர வெள்ள தடுப்பு அமைக்கும் பணிகள்  தீவிரமாக நடந்து வருவதாக அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.சென்னையில் பருவமழை காலத்தின்போது சாலைகளில் மழைநீர் தேங்குவது மற்றும் வெள்ள நீர் சென்னையில் புகாமல் தடுக்கும் வகையில், தடுப்பு நடவடிக்கைகள் நெடுஞ்சாலை துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு ஆகியோர் வெள்ள தடுப்பு பணிகள் குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது, சென்னை பெருநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மேயர் பிரியா மற்றும் உயர்  அதிகாரிகள் உடனிருந்தனர்.

அப்போது நிருபர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு அளித்த பேட்டி: கொளத்தூர் தொகுதியில் உள்ள வீனஸ் நகர், கணேஷ் நகர், ஜெயந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கும் மழைநீரை உடனுக்குடன் வெளியேற்ற உள்வட்ட சாலையில் வீனஸ் நகர் பகுதியில் நீர் சேகரிப்பு கிணறு மற்றும் நீர் வெளியேற்றும் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ரூ.96 லட்சம் மதிப்பில் நடந்து வரும் பணிகளை ஆய்வு செய்ததில், இதுவரை 30 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகள் வரும் 15ம் தேதிக்குள் முடிக்கப்பட்டு பொது மக்கள் பயண்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் டெம்பிள் பள்ளி அருகில், மழைநீர் சேகரிப்பு கிணறு மற்றும் நீர் வெளியேற்று நிலையம் அமைக்க இடையூறாக உள்ள மின் தளவாடங்கள் மற்றும் குடிநீர் குழாய்கள் மாற்றியமைத்த பின்னர் பணி மேற்கொள்ளப்படும். இந்த பணியை 31.10.2022க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கொளத்தூர் பகுதிகளில் தேங்கும் மழைநீர் தணிகாசலம் கால்வாய் வழியாக கொடுங்கையூர் கால்வாயை சென்றடையும் வகையில், உள்வட்ட சாலையின்  வலதுபுறத்தில் பெரிய மழைநீர் வடிகால் 250 மீட்டர் நீளத்திற்கு அமைக்கும் பணி ரூ.5 கோடி மதிப்பில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது கொளத்தூர் உபரிநீர் இரட்டை ஏரி வழியாக தொலைதூரம் சென்று தணிகாசலம் கால்வாயை சென்றடைகிறது. இப்பகுதியில் அமைக்கப்பட உள்ள பெரிய கால்வாயினால், கொளத்தூர் உபரிநீர் நேரடியாக தணிகாசலம் கால்வாயை அடையும்.  இதனால் நீர்வழி பாதையின் நீளம் குறையும். இப்பணி 31.10.2022க்குள் முடிக்கப்படும்.பெரிய மேற்கத்திய சாலையில், வேனல்ஸ் சாலை சந்திபில் தினத்தந்தி அலுவலகம் எதிரில் தேங்கும் மழை நீர் கூவம் ஆற்றினை சென்றடையும் வகையில், பெரிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணியும் ஒரு சிறுபாலம் அமைக்கும் பணியும் ரூ.2.55 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றது. இந்த பணிகள் 85 சதவீதம் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் 31.07.2022க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் இச்சாலையில் காவல் ஆணையகரம் மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்றும் வகையில் 5 சிறுபாலப் பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, 3 சிறுபாலப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.   மீதமுள்ள 2 சிறுபாலப் பணிகள் 31.8. 2022க்குள் முடிக்கப்படும்.இதனை தொடர்ந்து, வால்டாக்ஸ் சாலையில் (சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் பெத்தநாயக்கன் சாலை வரை) 2.3 கி.மீ. சாலையில் இருபுறங்களிலும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியும், 8 சிறுபாலங்கள் அமைக்கும் பணியும் ரூ.31.28 கோடி மதிப்பில் நடந்து வருகிறது. 4600 மீட்டர் நீளமுள்ள மழைநீர் வடிகால் அமைக்கும் பணியில், இதுவரை 3150 மீட்டர் நீளத்திற்கு பணி முடிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 8 சிறுபாலங்களில் 3 சிறுபால பணிகள் முடிவுற்றுள்ளன. மீதமுள்ள 5 சிறுபால பணிகளை மேற்கொள்ள தேவையான முன்வார்கப்பட்ட பாலப் பெட்டிகள் சிறுபாலம் அமைக்க தயார் நிலையில் உள்ளன.

இதுதவிர, இப்பணிக்கு இடையூறாக குடிநீர், கழிவுநீர் குழாய்களை மாற்றியமைக்க குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்திற்கு ரூ.4.54 கோடி செலுத்தப்பட்டு குழாய்கள் மாற்றியமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. மின்பெட்டிகள் மற்றும் மின் மாற்றிகளை மாற்றியமைக்க, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு  ரூ.54 லட்சம் செலுத்தப்பட்டுள்ளது. மழைக்காலத்திற்கு முன்னரே பணிகள் அனைத்தும் முடிக்க தொடர்ந்து பிற துறை சம்பந்தப்பட்ட, மின் துறை, ரயில்வே துறை, சென்னை பெருநகர மாநாகராட்சி அலுவலர்களுடன் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Chennai ,Minister AV ,Velu , As the monsoon season is about to begin, flood prevention work in Chennai is intensified: Minister AV Velu interview
× RELATED கரிவலம்வந்தநல்லூர் அருகே...