ராணுவத்தின் 3 படைகளும் அடங்கிய கூட்டுப்படை திட்டம் ஒன்றிய அரசு ஒப்புதல்: ராஜ்நாத் சிங் அறிவிப்பு

ஜம்மு: நாட்டின் எல்லா பகுதிகளிலும் ராணுவத்தின் முப்படைகளும் அடங்கிய கூட்டுப்படையை, புதிய கமாண்டர்களின் கீழ் உருவாக்கும் திட்டத்துக்கு நீண்ட இழுபறிக்குப் பிறகு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மக்கள் மன்றம் சார்பில், இந்திய ஆயுதப் படைகளின் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஜம்முவில் நேற்று  நடந்தது. இதில், பாதுகாப்பு  அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசியதாவது: கார்கில் போரில் நாட்டின் எல்லைகளையும், இறையாண்மையையும் காப்பதற்காக நமது  ராணுவ வீரர்கள் பலர் வீரமரணம் அடைந்தனர்.  

அவர்களின் தியாகத்தையும், குடும்பத்தினரையும் மதிப்பது நமது கடமை.  அந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு அனைத்து விதமான உதவிகளையும் அளிப்பது, நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பு.  ‘ஆபரேஷன் விஜய்’ போரின்போது, முப்படைகளும் அடங்கிய கூட்டு ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது. அது வெற்றிகரமாக அமைந்தது. இதை கருத்தில் கொண்டு ராணுவத்தின் முப்படைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்காக, முப்படைகளும் அடங்கிய கூட்டுப்படை, தனி கமாண்டரின் கீழ் விரைவில் அமைக்கப்படும்.

இந்த திட்டத்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.ராணுவ தளவாடங்கள் இறக்குமதியில் உலகின் மிகப்பெரிய நாடாக இந்தியா முன்பு இருந்தது. ஆனால், தற்போது நாம் ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்வது இல்லை. அதற்கு மாறமாக, உலகில் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்யும் 25 முன்னணி நாடுகள் பட்டியலில் இப்போது இடம் பெற்றுள்ளது. தற்போது, ரூ.13 ஆயிரம் கோடிக்கு ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி ஆகிறது. வரும் 2025ம் ஆண்டுக்குள் ரூ.40 ஆயிரம் கோடி ஏற்றுமதி  இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: