×

தாக்கினால் 88% மரணம் நிச்சயம் வருகிறது அடுத்த வைரஸ்: மூக்கு, பிறப்புறுப்பில் ரத்தம் ஊற்றும்

புதுடெல்லி: ஆப்பிரிக்காவால் உருவான குரங்கம்மை இந்தியாவில் இப்போது நுழைந்துள்ள நிலையில், ஆப்பிரிக்காவில் ‘மார்பர்க்’ என்ற புதிய வைரஸ் வேகமாக பரவி வருவது,  மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரசின் தாக்குதலால் உலக நாடுகள் நிலைக்குலைந்து போயுள்ளன. இதில் இருந்து மெதுவாக மீண்டு வரும் நிலையில், அடுத்தடுத்து உருவாகும் புதிய வைரஸ்கள் மனித குலத்தை அச்சுறுத்தி வருகின்றன. அந்த வகையில், சில மாதங்களுக்கு முன் ஆப்பிரிக்காவில் இருந்து கிளம்பிய குரங்கம்மை நோய், இப்போது 75 நாடுகளில் பரவி இருக்கிறது.

இது போதாது என்று, இதே ஆப்பிரிக்காவில் இருந்து தற்போது ‘மார்பர்க்’ என்ற புதிய வகை வைரஸ் உருவாகி உள்ளது. ஆப்பிரிக்காவில் உள்ள கானா நாட்டில் ஏற்கனவே 2 பேர் இந்த வைரஸ் தாக்கி பலியாகி உள்ளனர். இதில் ஒருவருக்கு 26 வயது, மற்றொருவருக்கு 51 வயது. இதனால், இவர்களுடன் தொடர்பில் இருந்து 90க்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்படுகின்றனர்.   இந்த மார்பர்க் வைரஸ், எபோலா வைரஸ் குடும்பத்தை சேர்ந்தது. இந்த வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டதா என மருத்துவ நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

* எபோலா பாதித்தால் காய்ச்சல், வாந்தி, ரத்தப்போக்கு, வயிற்று போக்கு ஏற்படுவது போல், மார்பர்க் வைரஸ் தாக்கினாலும் அதேபோன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன.

* அதோடு, மூக்கு மற்றும் பிறப்புறுப்புகளில் ரத்தம் வருவதும் இந்த வைரஸ் தாக்குதலின் தீவிர அறிகுறிகளாக உள்ளன.

* நோயாளிகளின் கண்கள் ஆழமாக புதைந்தது போல் காணப்படும். வெளிறிய முகங்கள், தீவிர சோம்பல் போன்றவையும் இதன் அறிகுறிகளாக உள்ளன. கடந்த 1967ம் ஆண்டு முதல் இதுவரை 12 முறை கிழக்கு மற்றும் தென் ஆப்பிரிக்கா நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது. இதன் இறப்பு விகிதம் 24 சதவீதத்தில் இருந்து 88 சதவீதம்  வரை  இருக்கும்.



Tags : If attacked, 88% death is guaranteed Next virus: nose, genital bleeding
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...